ஐ.டி., நிறுவனங்களுக்காக ஓசூர் அருகே 'பைபாஸில்' உலக தர கட்டமைப்பு வசதி
ஐ.டி., நிறுவனங்களுக்காக ஓசூர் அருகே 'பைபாஸில்' உலக தர கட்டமைப்பு வசதி
ஐ.டி., நிறுவனங்களுக்காக ஓசூர் அருகே 'பைபாஸில்' உலக தர கட்டமைப்பு வசதி
ADDED : செப் 10, 2025 02:44 AM

சென்னை:ஓசூர் அறிவுசார் பெரு வழித்தட திட்டத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள பாகலுார் பைபாஸ் உள்ளிட்ட மூன்று சாலைகளில், ஐ.டி., நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் போன்ற தொழில் துவங்க, உலக தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு அருகில் அமைந்துள்ளது ஓசூர். இது, முக்கிய தொழில் நகரமாக உருவெடுத்து வருகிறது. நாட்டின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய மையமாக திகழும் பெங்களூரில், போக்குவரத்து நெரிசல் பெரிய பிரச்னையாக உள்ளது.
அங்கு செயல்படும் நிறுவனங்கள், தங்களின் கிளைகளை பல்வேறு நகரங்களில் அமைக்க திட்டமிட்டுள்ளன. எனவே, ஓசூர் நகரை ஒட்டி, உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய, ஓசூர் அறிவுசார் பெருவழித்தட திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, சென்னை ராஜிவ் சாலையின் இருபுறங்களிலும் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுவதுபோல், ஓசூர் அருகில் உள்ள பாகலுார் பைபாஸ் ரோடு, அவுட்டர் ரிங் ரோடு, சாட்டிலைட் ரோடு ஆகிய சாலைகளின் இரு புறங்களிலும், உலகத்தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
அங்கு, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், உலகளாவிய திறன் மையங்கள் போன்றவை தொழில் துவங்க, அரசு நடவடிக்கை எடுக்க உள்ளது.
உள்கட்டமைப்பு பணிகளை ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக, 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் விரைவில் மேற்கொள்ள உள்ளது.