காவல் நிலையத்தில் தொழிலாளி மரணம்; 7 போலீசாருக்கு ரூ.10 லட்சம் அபராதம்
காவல் நிலையத்தில் தொழிலாளி மரணம்; 7 போலீசாருக்கு ரூ.10 லட்சம் அபராதம்
காவல் நிலையத்தில் தொழிலாளி மரணம்; 7 போலீசாருக்கு ரூ.10 லட்சம் அபராதம்
ADDED : மே 28, 2025 03:00 AM

சென்னை : சேலம் மாவட்டம் கருமலைக்கூடல் காவல் நிலையத்திற்கு, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தொழிலாளி கோகுலகண்ணன் மரணம் அடைந்ததை தொடர்ந்து, இரண்டு எஸ்.ஐ.,க்கள் உட்பட ஏழு போலீலாருக்கு, 10 லட்சம் ரூபாய் அபாரதம் விதித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என்பவர், 2015ல் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி கோகுலகண்ணன் என்பவரை, விசாரணைக்காக போலீசார் நள்ளிரவில் அழைத்துச் சென்றனர்.
அதிகாலையில் உடல்நிலை சரியில்லை எனக்கூறி, கோகுலக்கண்ணனை மேட்டூர் அரசு மருத்துவமனையிலும், பின், சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையிலும் சேர்த்தனர்; அங்கு அவர் உயிரிழந்தார்.
போலீசார் தாக்கியதால் கோகுலகண்ணன் உயிரிழந்ததாக கூறி, அவரது உறவினர்களும், உள்ளூர் மக்களும் காவல் நிலையம் முன் திரண்டு போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக, நாளிதழ்களில் வெளி யான செய்தி அடிப்படை யில், மாநில மனித உரிமை கள் ஆணையம், தாமாக முன்வந்து வழக்கு பதிந்தது.
இந்த வழக்கை விசாரித்த ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பிறப்பித்துள்ள உத்தரவு:
காவல் நிலையத்தில் உயிரிழந்த கோகுலகண்ணனின் குடும்பத்தினர், சம்பந்தப்பட்ட போலீசார், பிரேத பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள் உள்ளிட்டோரிடம், ஆணையத்தின் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது.
ஆணைய விசாரணை குழு அளித்த அறிக்கையில், 'கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்த பழனிசாமியை கொலை செய்ததாக ஒப்புக்கொள்ளும்படி, கோகுலகண்ணனை போலீசார் வலியுறுத்தி உள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, அவரை தாக்கி உள்ளனர். காயமடைந்த கோகுலகண்ணன், உரிய நேரத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படாததால் மரணம் அடைந்துள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.
போலீசார் தாக்கியதால் தான், கோகுலகண்ணன் உயிரிழந்துள்ளார் என்பது ஆணைய விசாரணையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, உயிரிழந்த கோகுலகண்ணனின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு, தமிழக அரசு, ஒரு மாதத்திற்குள் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
இதில், எஸ்.ஐ.,க்கள் ஹரிஹரன், கீர்த்திவாசன் ஆகியோரிடமிருந்து, தலா 2 லட்சம் ரூபாய், சிறப்பு எஸ்.ஐ.,க்கள் வேணுகோபால், சந்திரகுமார் ஆகியோரிடமிருந்து, தலா 1.50 லட்சம் ரூபாய், காவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, இளங்கோ, மதன்சேகரிடம் இருந்து தலா 1 லட்சம் ரூபாயை வசூலித்துக் கொள்ளலாம்.
இந்த ஏழு பேர் மீதும், நிலுவையில் உள்ள ஒழுங்கு நடவடிக்கையை மூன்று மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது