பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டசபை தேர்தலை சமாளிக்கவா: அரசு மீது எழும் அதிர்ச்சி குற்றச்சாட்டு!
பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டசபை தேர்தலை சமாளிக்கவா: அரசு மீது எழும் அதிர்ச்சி குற்றச்சாட்டு!
பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டசபை தேர்தலை சமாளிக்கவா: அரசு மீது எழும் அதிர்ச்சி குற்றச்சாட்டு!
ADDED : செப் 02, 2025 04:08 PM

சென்னை: தமிழக அரசு, சீனியாரிட்டி பட்டியல் தயாரிப்பதை தாமதம் செய்து வேண்டுமென்றே பொறுப்பு டிஜிபி நியமனம் செய்துள்ளதாகவும், சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு இவ்வாறு செய்துள்ளதாகவும், போலீசார், அரசியல் கட்சியினர் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
தமிழக போலீஸ் சட்டம் - ஒழுங்கு டி.ஜி.பி.,யாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றவுடன் புதிய டிஜிபி பொறுப்பேற்க வேண்டும். இதற்கு 6 மாதங்களுக்கு முன்னரே நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. அதை தமிழக அரசு சரி வர பின்பற்றாமல், கடைசி நேரத்தில் பட்டியல் தயாரிப்பு பணியை மேற்கொண்டது என்பது அரசியல் கட்சியினரின் குற்றச்சாட்டு.
அவ்வாறு தயாரிக்கப்பட்ட பட்டியலில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டி.ஜி.பி., சீமா அகர்வால், ஆவின் விஜிலென்ஸ் முதன்மை அதிகாரி டி.ஜி.பி., ராஜிவ் குமார், போலீஸ் அகாடமி இயக்குனர் டி.ஜி.பி., சந்தீப் ராய் ரத்தோட் உட்பட, 11 அதிகாரிகளின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால், தேர்வு நடைமுறைகள் நிறைவடையாததால், டி.ஜி.பி., அலுவலகத்தில், நிர்வாக பிரிவு டி.ஜி.பி.,யாக பணியாற்றிய வெங்கட்ராமனை, பொறுப்பு டி.ஜி.பி.,யாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இவர், சீனியாரிட்டி பட்டியலில் ஒன்பதாம் இடத்தில் இருந்தவர்.
வெங்கட்ராமன் பதவியேற்றுக் கொண்ட நிகழ்ச்சியில், அவரை காட்டிலும் சீனியாரிட்டி கொண்ட டி.ஜி.பி., அந்தஸ்து அதிகாரிகள் எட்டு பேர் பங்கேற்கவில்லை. சீனியர் ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் இந்நடவடிக்கை போலீசார் மத்தியில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.
உரிய காலத்தில் சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பி இருந்தால், தகுதியான நபர் டிஜிபியாக நியமனம் பெற்றிருப்பார். 'ஆனால், சட்டசபை தேர்தல் நேரத்தில் வேண்டாத அதிகாரி டிஜிபி பதவியில் இருந்தால், தங்களுக்கு சிக்கல் என்று கருதி மாநில அரசு இப்படி வேண்டுமென்றே குளறுபடி செய்து விட்டதாக' போலீசார், அரசியல் கட்சியினர், பத்திரிகையாளர்கள் மத்தியில் விவாதிக்கப்படுகிறது.
அண்ணாமலை கூறியது என்ன?
கோவையில் நடந்த நிகழ்ச்சியில் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், ''தமிழகத்தில் சங்கர் ஜிவால் ஓய்வு பெற்ற உடன் புது டிஜிபி பதவி ஏற்க வேண்டும். அவருக்கு பிறகு பதவி மூப்பில் முதல் 3 இடத்தில் உள்ளவர்களில் ஒருவர் பதவி ஏற்க வேண்டும். பதவி மூப்பில் 9வதாக இருக்கும் நபர் டிஜிபி ஆக முடியாது. அப்படி இருக்கும் போது காவல்துறை எப்படி விளங்கும்?
''பதவியேற்கும் நிகழ்வில் முதல் 8 இடங்களில் இருக்கும் அதிகாரிகள் செல்லவில்லை. இது மிகப்பெரிய தவறு. இதற்குமுன்பு இந்த மாதிரி தவறு நடந்தது இல்லை,'' என்றார்.