ADDED : மே 20, 2025 04:57 AM

சென்னை: தமிழகத்தில் மின் கட்டணம், கடந்த மூன்று ஆண்டுகளில், 40 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 2022ல் பிறப்பித்த உத்தரவுப்படி, வரும் ஜூலை 1 முதல், மின் கட்டணம், 3.16 சதவீதம் உயர்த்தப்பட வேண்டும்.
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடப்பதால், மின் கட்டணத்தை உயர்த்த அரசு தரப்பில் தயக்கம் காட்டப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக மின்வாரியம் நிதி நெருக்கடியில் உள்ளது. இதனால், 2022 செப்., 10 முதல் மின் பயன்பாட்டு கட்டணம், மின்சார சேவைகளுக்கான பல்வகை கட்டணம், 35 சதவீதம் உயர்த்தப்பட்டது.
இது தொடர்பாக, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த ஆணையில், 2022 - 23 முதல், 2026 - 27 வரை, ஆண்டுதோறும் மின்கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும் ஜூலை 1 முதல், அதிகபட்சமாக, 6 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தலாம்.
கடந்த, 2023 ஜூலையில் மின்கட்டணம், 2.18 சதவீதம் உயர்த்தப்பட்டது. இதனால் யூனிட்டிற்கு, 13 காசு முதல், 21 காசு வரை உயர்ந்தது.
![]() |
வீடுகளுக்கான மின்கட்டண உயர்வு செலவை, தமிழக அரசு ஏற்றது. 2024 ஜூலை முதல் மின்கட்டணம், 4.83 சதவீதம் உயர்த்தப்பட்டது. அப்போது, யூனிட்டிற்கு, 20 காசு முதல், 55 காசு வரை அதிகரித்தது.
இந்நிலையில், வரும் ஜூலை முதல் மின் கட்டணம், 3.16 சதவீதம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம், அடுத்த ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், இந்த கட்டண உயர்வை கைவிடுவது தொடர்பாக, ஆணையத்திடம் வலியுறுத்த, அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.