அடமான நகையை மீட்க புது நிபந்தனை ஏன்?
அடமான நகையை மீட்க புது நிபந்தனை ஏன்?
அடமான நகையை மீட்க புது நிபந்தனை ஏன்?
ADDED : மார் 23, 2025 01:41 AM
''நகைக்கடன் என்ற பெயரில், குறிப்பிட்ட நபர்களிடம் பணம் முடங்குவதை தவிர்க்க, நகைக்கடன் வாங்கியவர்கள், அதற்குரிய தொகையை முழுமையாக கட்டிய பின்தான், புதிதாக நகையை அடகு வைக்க முடியும்,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தற்போது கூட்டுறவு வங்கி உட்பட அனைத்து வங்கிகளிலும், நகைகளை அடமானம் வைப்போர், அதை ஓராண்டுக்குள் முழுத்தொகை செலுத்தி திருப்ப முடியாவிட்டால், வங்கியில் குறிப்பிட்ட தொகையை செலுத்தினால், சில நிமிடங்களில், அந்த நகையை மீண்டும் அடமானம் வைத்தது போல காண்பித்து விடுவர்.
இனிமேல் அவ்வாறு செய்ய முடியாது. நகைக்கடன் தொகையை முழுமையாக செலுத்தி, அந்த நகையை மீட்டு, மறுநாள் தான் நகையை மீண்டும் அடகு வைக்க வேண்டும் என, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கி உள்ளது.
இதனால், நகையை அடமானம் வைத்த ஏழை மக்கள், முழு தொகையை கடன் பெற்றுத்தான் செலுத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
விவசாயத்திற்காக நகைக்கடன் வைத்திருப்போர் தவிர்த்து, பெரும்பாலானோர் கட்டடம் கட்டுவது உட்பட பல்வேறு காரணங்களுக்காக, நகைகளை அடமானம் வைத்து பணம் பெறுகின்றனர். குறிப்பிட்ட நபர்களிடம் தொடர்ந்து பணம் தேங்குவது, வங்கியின் செயல்பாடுகளை பாதிக்கிறது.
நகைக்கடன் என்ற பெயரில் பணம் முடங்குகிறது. புதிய நபர்களுக்கு வேறு தேவைகளுக்கு, கடன் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. நகைக்கடன் என குறிப்பிட்ட நபரிடம் மட்டும் பணம் முடங்கக் கூடாது.
எனவே, பணத்தை திரும்ப செலுத்த கால நிர்ணயம் செய்யப்படுகிறது. அதை நீட்டித்துக் கொண்டே செல்ல முடியாது. வங்கிப்பணி நடந்து கொண்டே இருக்க வேண்டும். பணி நின்று விட்டால், அனைவரும் பாதிக்கப்படுவர். பணம் முடங்குவதை தவிர்க்கவே, ரிசர்வ் வங்கி இந்த அறிவுரையை வழங்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.