பி.எப்., தொகை செலுத்த நகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு
பி.எப்., தொகை செலுத்த நகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு
பி.எப்., தொகை செலுத்த நகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : மார் 23, 2025 01:41 AM
சென்னை: பி.எப்., எனும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி செலுத்தாததால், திருத்துறைப்பூண்டி நகராட்சி வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், 50 சதவீத தொகையை செலுத்த, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011 முதல் 2021ம் ஆண்டு வரை, 1 கோடியே, 65 லட்சத்து, 78,000 ரூபாய் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி செலுத்தும்படி, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சிக்கு, திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உதவி கமிஷனர் உத்தரவிட்டார்.
அதன்படி, வருங்கால வைப்பு நிதி செலுத்தாததால், திருத்துறைப்பூண்டி நகராட்சியின் வங்கிக் கணக்கை முடக்கம் செய்து, உதவி கமிஷனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், திருத்துறைப்பூண்டி நகராட்சி வழக்கு தொடர்ந்தது. வழக்கை நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சார்பில், வழக்கறிஞர் எம்.பழனிமுத்து ஆஜரானார்.
இதையடுத்து, 'ஒரு கோடியே 65 லட்சத்து, 78,000 ரூபாய் வருங்கால வைப்பு நிதியில், 50 சதவீத தொகையை, திருச்சி மண்டல அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம் நான்கு வாரத்தில் செலுத்த வேண்டும். அத்தொகையை செலுத்திய பின், நகராட்சி வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டும்' என்று, நீதிபதி உத்தரவிட்டார்.