அவ்வை யார்: சட்டசபையில் சுவாரஸ்ய விவாதம்!
அவ்வை யார்: சட்டசபையில் சுவாரஸ்ய விவாதம்!
அவ்வை யார்: சட்டசபையில் சுவாரஸ்ய விவாதம்!
ADDED : மார் 19, 2025 05:07 AM

சென்னை:
சட்டசபையில் கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - ஓ.எஸ்.மணியன்: அவ்வையின் வாக்கு அமுதமாகும். வேதாரண்யம் தொகுதி துளசியாப்பட்டினம் கிராமத்தில், அவ்வையாருக்கு கோவில் உள்ளது. மணிமண்டபம் கட்டும் பணி நடந்து வருகிறது. அங்கு அவ்வையார் அறிவுக் களஞ்சியம் துவக்க வேண்டும்.
அமைச்சர் சாமிநாதன்: மிகப்பெரிய வாழ்வியல் தத்துவங்களை, ஒரு வரி கவிதையாக வடித்தவர் அவ்வையார். நிதி நிலைக்கேற்ப, அரசு பரிசீலனை செய்யும்.
ஓ.எஸ்.மணியன்: நிதி தேவையில்லை. மணிமண்டபத்தில் புத்தகங்கள் வைத்தால் போதுமானது. அவ்வையாரை பொறுத்தவரை, அவர் அருளிய பாடல்கள் அனைத்தும் பொருள் பொதிந்தவை. அவர் எழுதிய புத்தகங்களை வைக்க வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்: அவ்வையார் ஐந்து பேர் என, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆத்திச்சூடி பாடிய அவ்வையார் வேறு. புறநானுாறு அவ்வையார் வேறு. உறுப்பினர் எந்த அவ்வையாரை குறிப்பிடுகிறார்.
ஓ.எஸ்.மணியன்: துளசியாபட்டினம் கிராமத்தில், அவ்வையாருக்கு மணிமண்டபம் கட்டப்படுகிறது. அந்த அவ்வையாருக்கு அறிவுக்களஞ்சியம் அமைக்க வேண்டும்.
சபாநாயகர்: அது எந்த அவ்வையார் என்று அமைச்சர் கேட்கிறார்.
ஓ.எஸ்.மணியன்: ஒரு காலத்தில் பாடல்கள் பாடியவர்களை புலவர்கள் என்று அழைத்தனர். அது ஆண்பாலுக்குரிய சொல். பாடல்களை பாடிய பெண்களை, அதில் சிறந்தவர்களை, மதிக்கக்கூடிய அனைவரையும், அவ்வையார் என அழைத்துள்ளனர்.
அமைச்சர் துரைமுருகன்: நம் வீட்டில் வயதானவர்களை ஆயா என கூப்பிடுவதுபோல.
அமைச்சர் தங்கம் தென்னரசு: இதுவரை அவ்வையார் என நினைத்துக் கொண்டிருந்தோம். இப்போது தான் 'அவ்வை' யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவ்வையார் என்பதை ஒரு குறியீடாக எடுத்துக் கொள்ளலாம். மகளிருக்கு ஒரு குறியீடு. மதிப்பிற்குரிய ஒரு சொல்லாக உள்ளது. அந்த வகையில் எடுத்துக் கொள்ளலாம். ஏற்கனவே விடுதலை போராட்ட வீரர்கள், அறிஞர்கள் மணிமண்டபம் அமைக்கப்படும் போது, அங்கு வரும் பார்வையாளர்களுக்கு பயன் பெறும் வகையில், நுாலகமாக அமைக்கப்பட வேண்டும் என, முதல்வர் கூறியுள்ளார். அதன்படி செய்யலாம்.
அமைச்சர் சாமிநாதன்: பாதி சுமையை குறைத்த நிதி அமைச்சருக்கு நன்றி. எதிர்காலத்தில் உறுப்பினர் கோரிக்கை பரிசீலிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.