கார்த்தி மீது என்ன நடவடிக்கை? நழுவிய ராமசாமி!
கார்த்தி மீது என்ன நடவடிக்கை? நழுவிய ராமசாமி!
கார்த்தி மீது என்ன நடவடிக்கை? நழுவிய ராமசாமி!
ADDED : ஜன 10, 2024 11:32 PM
பிரதமர் மோடியை பாராட்டிப் பேசி, சர்ச்சையில் சிக்கியுள்ளார் காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து, அக்கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு, அதன் தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில், சென்னையில் நேற்று கூடி விவாதித்தது.
உறுப்பினர்கள் எஸ்.எம்.இதயத்துல்லா, உ.பலராமன், டாக்டர் தம்பி ஆகியோர் பங்கேற்ற அந்த கூட்டத்தில், கார்த்தி மீது அளிக்கப்பட்ட புகார் கடிதங்களை அப்படியே, டில்லி மேலிடத்திற்கு அனுப்பி வைக்கவும், அதன் அடிப்படையில், தேசிய அமைப்பு பொதுச்செயலர் வேணுகோபால் முடிவெடுக்கட்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டம் முடிந்ததும், கே.ஆர்.ராமசாமியை சந்தித்த செய்தியாளர்களிடம், ''கட்சியின் உள்விவகாரங்களை வெளியில் சொல்ல மாட்டோம். கார்த்தி தொடர்பான கேள்விகளை, அவரிடமே கேளுங்கள். இந்த விவகாரம் குறித்து அவர் பதில் அளிப்பதுதான் சரியாக இருக்கும்,'' என்றார் அவர்.
கார்த்தி மீது நடவடிக்கை எடுப்பீர்களா அல்லது பயப்படுகிறீர்களா என கேள்விகள் தொடர, கையெடுத்து கும்பிடு போட்டபடி நகர்ந்து போய் விட்டார், ராமசாமி.
இதற்கிடையில், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்களில் ஒருவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான ஆர்.எம்.பழனிசாமி, குழு தலைவர் ராமசாமிக்கு எழுதியுள்ள கடிதம்:
கார்த்தி சிதம்பரம் பேட்டியை முழுமையாக பார்த்து, அதற்கு பின் அதில் தவறுகள் இருக்கும் என்றால், அதை பற்றி புகாராக குறிப்பிடலாம்.
நான் பார்த்தவரை, அவர் ஏற்கனவே அளித்திருந்த பேட்டியில், கார்த்தி பேசியதாக ஊடகங்களில் குறிப்பிடப்படும் எந்த வார்த்தைகளும் இல்லை. அப்படி இருக்கும்போது, குறிப்பிட்டு விளக்கம் கேட்கும் அளவிற்கு, அதில் எதுவும் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்து.
எனவே, என் எதிர்ப்பை பதிவு செய்கிறேன். ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு இதுபோன்ற அதிகாரங்கள் கிடையாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கார்த்தி பேசிய விவகாரத்தில், ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் இருப்போருக்குள்ளேயே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.
கார்த்தியின் சர்ச்சை பேச்சு குறித்து, உரிய நடவடிக்கை எடுக்க, இந்த விவகாரத்தை கட்சியின் டில்லி மேலிடத்துக்கு அனுப்பி விடலாம் என ஒழுங்கு நடவடிக்கைக் குழு தீர்மானித்ததன் பின்னணி இதுதான் என்கிறது கட்சி வட்டாரம்.
- நமது நிருபர் -