இன்னும் 4 நாட்களுக்கு வெயில் அடிக்கும்
இன்னும் 4 நாட்களுக்கு வெயில் அடிக்கும்
இன்னும் 4 நாட்களுக்கு வெயில் அடிக்கும்
ADDED : ஜூலை 24, 2024 06:53 AM

சென்னை : 'தமிழகம், புதுச்சேரியில், இன்னும் நான்கு நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அந்த மையத்தின் செய்திக்குறிப்பு:
நேற்று காலை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் தேவாலா மற்றும் சின்னக்கல்லாரில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது. பந்தலுார், அவலாஞ்சி, 5; மாஞ்சோலை, கூடலுார், வால்பாறை, முள்ளங்கினாவிளை, காக்காச்சி, 2; தக்கலை, நடுவட்டம், குந்தா, எமரால்டு, கொட்டாரம், குளச்சல், சோலையார், ஆழியார், 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் குறைந்துள்ளது. அதனால், கனமழைக்கு வாய்ப்பில்லை. அதேநேரம், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வரும் 29ம் தேதி வரை, சில இடங்களில் மிதமான மழை பெய்யும். இன்று சில இடங்களில் மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் வலுவான தரைக்காற்று வீசும்.
வெப்பநிலையை பொறுத்தவரை, இன்னும் நான்கு நாட்களுக்கு கடந்த வாரத்தை விட அதிகரிக்கும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக, 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.
மத்திய, வடக்கு வங்கக் கடல், வடக்கு ஆந்திரா, தெற்கு அந்தமான், மத்திய, தென்கிழக்கு அரபிக் கடலோர பகுதிகளில், மணிக்கு, 65 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும். எனவே, இந்த பகுதிகளுக்கு வரும் 26ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.