Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க., புறக்கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க., புறக்கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க., புறக்கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க., புறக்கணிப்பு

UPDATED : ஜூன் 15, 2024 05:03 PMADDED : ஜூன் 15, 2024 04:21 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை, அ.தி.மு.க., புறக்கணிப்பதாக அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு, ஜூலை 10ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இது தொடர்பாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இ.பி.எஸ்., தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன்,, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க., புறக்கணிப்பதாக அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அறித்துள்ளார்.

பண பலம், படைபலம்

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக அரசின் அமைச்சர்களும், தி.மு.க.,வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதோடு, பண பலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் கட்டவிழ்த்துவிட்டு மக்களை சுதந்திரமாக ஓட்டளிக்க விடமாட்டார்கள். தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது. இதனால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது. இவ்வாறு இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

பெரிய பாதிப்பு ஏற்படாது!

இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திமுக.,வினர் தேர்தலில் வெற்றி பெற பணத்தை வைத்து எத்தகைய முயற்சியும் செய்வார்கள். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயகத்தின் கழுத்து நெறிக்கப்பட்டது.
திமுக ஆட்சியில் இருக்கும் வரை இடைத்தேர்தல் நேர்மையாக நடக்காது என ஜெயலலிதா கூறியிருந்தார். ஒரு தொகுதியில் இடைத்தேர்தலை புறக்கணிப்பதால் பெரிய அளவில் பாதிப்பு வர போவதில்லை. பா.ஜ., மற்றும் நாம் தமிழர் கட்சி எல்லாம் பெரிய கட்சி அல்ல. அதிமுக தான் பெரிய கட்சி.
வெற்றி பெறுவதற்காக திமுக.,வினர் கொலுசு, அண்டா-குண்டா, தங்க செயின் எல்லாம் கொடுப்பார்கள். பாத்திரம் கழுவுவார்கள், துணி கூட துவைத்துக் கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.



களத்தில் திமுக, நாம் தமிழர், பா.ம.க.,

தி.மு.க., வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். பா.ஜ., கூட்டணியில் உள்ள பா.ம.க., போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்து போட்டியிடுகிறது. வேட்பாளராக ஹோமியோபதி மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என, அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. தி.மு.க., நாம் தமிழர் கட்சி மற்றும் பாமக ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us