Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/எழுத்தாளர் யூமா வாசுகிக்கு பால புரஸ்கார் விருது

எழுத்தாளர் யூமா வாசுகிக்கு பால புரஸ்கார் விருது

எழுத்தாளர் யூமா வாசுகிக்கு பால புரஸ்கார் விருது

எழுத்தாளர் யூமா வாசுகிக்கு பால புரஸ்கார் விருது

UPDATED : ஜூன் 15, 2024 03:33 PMADDED : ஜூன் 15, 2024 01:27 PM


Google News
Latest Tamil News
சென்னை: சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருதுக்கு, 'விஷ்ணு வந்தார்' என்ற சிறுகதை தொகுப்பு எழுதிய லோகேஷ் ரகுராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பால புரஸ்கார் விருதுக்கு, 'தன்வியின் பிறந்த நாள்' கதைத்தொகுப்பு எழுதிய யூமா வாசுகி தேர்வாகி உள்ளார்.

தலைசிறந்த இலக்கியவாதிகளுக்கு சாகித்ய அகாடமி பல பிரிவுகளில் விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. சாகித்ய அகாடமி வழங்கும் பால சாகித்ய புரஸ்கார், யுவ புரஸ்கார் விருதுகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறந்து விளங்கிய கவிதை, கட்டுரைகள், சிறுகதைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தாண்டு, சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருதுக்கு, 'விஷ்ணு வந்தார்' என்ற சிறுகதை தொகுப்பு எழுதிய லோகேஷ் ரகுராமன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பால புரஸ்கார் விருதுக்கு, 'தன்வியின் பிறந்த நாள்' கதைத்தொகுப்பு எழுதிய யூமா வாசுகி தேர்வாகி உள்ளார்.

யூமா வாசுகி யார்?

பட்டுக்கோட்டையில் பிறந்த யூமா வாசுகி, கும்பகோணம் கவின்கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்றவர். 'தோழமை இருள்', 'இரவுகளின் நிழற்படம்', 'அமுத பருவம்', 'வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு' உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகளை உருவாக்கினார்.

'உயிர்த்திருத்தல்' எனும் சிறுகதைத் தொகுப்பு, 'ரத்த உறவு', 'மஞ்சள் வெயில்' ஆகிய நாவல்களும் எழுதியவர். கனிந்த, நெகிழ்வான தனித்த மொழிநடையால் தமிழ்க் கவிதைப் பரப்பில் தனக்கான ஓர் இடத்தைப் பிடித்தவர். 'கசாக்கிண்ட இதிகாசம்' எனும் நூலை 'கசாக்கின் இதிகாசம்' என்ற பெயரில் தமிழில் மொழியாக்கம் செய்ததற்காக, 2017ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றிருந்தார்.

லோகேஷ் ரகுராமன் யார்?

லோகேஷ் ரகுராமன் மே 23ம் தேதி 1990ம் ஆண்டு பிறந்தவர். இவர் இணைய இதழ்களில் தொடர்ச்சியாக சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.

வாழ்த்து

இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாவல், கவிதை, சிறுகதை என அனைத்து வடிவங்களிலும் தமிழிலக்கியத்தில் தனி அடையாளத்துடன் பயணித்து வருபவர் யூமா வாசுகி. ஏற்கனவே சிறந்த மொழிபெயர்ப்பிற்கான சாகித்ய அகாடமி விருது வென்றுள்ள அவர், தற்போது 'தன்வியின் பிறந்தநாள்' நூலுக்காக பால சாகித்ய புரஸ்கார்க்கும் தேர்வாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழில் இன்னும் வளம்பெற வேண்டிய சிறார் இலக்கிய வகைமைக்கு அவர் ஆற்றிவரும் பாராட்டுக்குரிய பங்களிப்புக்கான உரிய அங்கீகாரம் இது! வாழ்த்துகள்!. காவிரிக்கரையில் இருந்து மற்றுமொரு இலக்கிய வரவாகத் தடம் பதித்து, 'விஷ்ணு வந்தார்' சிறுகதைத் தொகுப்பிற்காக யுவ புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியுள்ள நம்பிக்கைக்குரிய இளைஞர் லோகேஷ் ரகுராமனுக்கும் எனது பாராட்டுகள்!. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us