பல்கலை துணை வேந்தர்கள் நியமன வழக்கு; எதிர்மனுதாரர்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
பல்கலை துணை வேந்தர்கள் நியமன வழக்கு; எதிர்மனுதாரர்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
பல்கலை துணை வேந்தர்கள் நியமன வழக்கு; எதிர்மனுதாரர்களுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
ADDED : செப் 23, 2025 06:54 AM

- டில்லி சிறப்பு நிருபர் -
பல்கலைகளுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரிய தமிழக அரசின் மனு தொடர்பாக எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸ் பிறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்கலைகளுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைகளின் வேந்தராக மாநில முதல்வரை நியமிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய மசோதாக்களை, கவர்னரின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது; அவற்றுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, மசோதாக்கள் சட்டமாக மாறி, அரசிதழிலும் வெளியிடப்பட்டன.
நிறுத்தி வைப்பு இந்நிலையில், துணைவேந்தர்கள் நியமனத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த அதிகாரத்தை பயன்படுத்தி, தமிழக அரசு அடுத்தடுத்த பணிகளில் இறங்கியது.
அதேநேரத்தில், தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.,வைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை, மே 21ம் தேதி விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை இடைக்காலமாக நிறுத்தி வைத்தது.
அதேநேரத்தில், 'வெங்கடாசலபதி தொடர்ந்த மனுவை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்திருப்பதாகவும், அதனால், எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது' என்றும், தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி, 'டிரான்ஸ்பர்' பெட்டிஷனும் தாக்கல் செய்தது.
புதிய மனு இந்த மனுக்கள் மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு முன் நேற்று நடைபெற்றது.
அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'வழக்கை இடமாற்றம் செய்யக் கோரிய மனு மீது, எதிர்மனு தாரர்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்னும் நோட்டீஸ் பிறப்பிக்கவில்லை.
'மேலும் துணைவேந்தர்கள் நியமனத்தில் பல்கலை மானிய குழுவின் விதிமுறைகளில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பாகவும், நாங்கள் புதிய மனு தாக்கல் செய்திருக்கிறோம். இவை அனைத்தின் மீதும் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும்' என, வாதங்களை முன்வைத்தார்.
அதை ஏற்ற நீதிபதிகள் எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் பிறப்பித்ததுடன், வழக்கின் விசாரணையை நான்கு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.