Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ இந்தியாவை வளர்ந்த நாடாக்கவே ஜி.எஸ்.டி.,யில் சீர்திருத்தம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

இந்தியாவை வளர்ந்த நாடாக்கவே ஜி.எஸ்.டி.,யில் சீர்திருத்தம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

இந்தியாவை வளர்ந்த நாடாக்கவே ஜி.எஸ்.டி.,யில் சீர்திருத்தம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

இந்தியாவை வளர்ந்த நாடாக்கவே ஜி.எஸ்.டி.,யில் சீர்திருத்தம்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

UPDATED : செப் 15, 2025 10:38 AMADDED : செப் 15, 2025 02:58 AM


Google News
Latest Tamil News
சென்னை: ''இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டும் என்ற பிரதமரின் எண்ணத்தை நிறைவேற்றவே, சரக்கு மற்றும் சேவை வரியான ஜி.எஸ்.டி.,யில் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவன சங்கங்களின் சார்பில், 'வளரும் நாட்டிற்கு வரி சீர்திருத்தம்' என்ற தலைப்பில், சென்னை ராயப்பேட்டையில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. சீர்திருத்தம் அதில், பல்வேறு வர்த்தக, வணிக மற்றும் தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கருத்தரங்கில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

கடந்த 2017ல் ஜி.எஸ்.டி., அறிமுகமான போது, தமிழக மக்களுக்கு அது பற்றி விளக்கும் பொறுப்பை, தமிழ் பேசும் மத்திய அமைச்சராக நான் ஏற்றிருந்தேன். அப்போது, வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜா, வரி விதிப்பில் இருந்த பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதித்தார். அவரது கருத்துகளை உள்வாங்கி, ஜி.எஸ்.டி., கவுன்சிலில் நான் விளக்கினேன். அதன்பின், வரி விதிப்பில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன.

தற்போது, மிகப்பெரிய வரி சீர்திருத்தம் செய்யப்பட்ட நிலையில், அவரும் பங்கேற்றுள்ளது பொருத்தமாக உள்ளது. இதுவரை, நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., விகிதம், தற்போது இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டு உள்ளது. அடுக்குகள் மட்டுமின்றி வரியும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களின் விலையும் குறையும்.

நன்மைகள் அதாவது, 28 சதவீதமாக இருந்த வரி விகிதம் 18 ஆகவும், 5 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 10 சதவீதம் வரை வரி குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை, 18 சதவீதமாக இருந்த 99 சதவீத பொருட்களின் வரியை, 5 சதவீதமாக குறைத்துள்ளோம்.

இதனால், தமிழகத்தில் உற்பத்தியாகும் பவானி ஜமுக்காளம், தஞ்சாவூர் பொம்மைகள், தேங்காய் நார் பொருட்கள் உள்ளிட்டவற்றுக்கு பலவித நன்மைகள் கிடைக்கும். இதுபோல, நாடு முழுதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறை பின்பற்றப்பட்டு, விலைவாசியும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால், நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் செலவு குறையும்.

பிரதமர் மோடி தன் சுதந்திர தின உரையில், 'தீபாவளிக்கு முன்பே, இந்த வரி குறைப்பு இருக்கும்' என்றார். ஆனால், நவராத்திரி பண்டிகை கொண்டாடும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் மக்களும், உடைகள் எடுப்பது, அத்தியாவசிய பொருட்களை வாங்குவது உள்ளிட்டவற்றில் பயன் பெறும் வகையில், ஜி.எஸ்.டி., சீர்திருத்தம் வரும் 22ம் தேதியே அமலாக உள்ளது. ஜி.எஸ்.டி.,யை அறிமுகம் செய்த போது, 65 லட்சம் பேர் மட்டுமே வரி செலுத்துவோராக இருந்தனர். தற்போது, 1.50 கோடி பேர் வரி செலுத்துகின்றனர்.

அதற்கு, இதன் எளிமையும், ஒருமுகத்தன்மையுமே காரணம். வரி குறைப்பு ஜி.எஸ்.டி., அமலான நேரத்தில், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் மாநில நிதி அமைச்சர்களும் உறுப்பினராக பங்கேற்றனர். இதன் பாதிப்புகள் குறித்து, மத்திய அரசை மட்டுமே விமர்சித்தனர். ஆனால், இந்த வரியின் பலனை மத்திய அரசு, 23 சதவீதம் தான் அனுபவிக்கிறது. சிலர், 'நிர்மலா மாமிக்கு ஊறுகாய் தான் போடத் தெரியும்; ஜி.எஸ்.டி., கணக்கு போடத் தெரியாது' என்றும் விமர்சித்தனர். அதை, நாங்கள் பொறுமையாகவே கையாண்டோம்.

தற்போது, 350 வகை பொருட்கள் மீதான வரியை குறைத்துள்ளோம். இதற்காக எதிர்க்கட்சிகள், பிரதமரை பாராட்டவில்லை. இதன் பின்னாலும், மாநில நிதி அமைச்சர்கள் எனும் ஜி.எஸ்.டி., கவுன்சில் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களுக்கும் இதில் பங்கு உள்ளது என்பதை வெளிப்படையாக தெரிவிக்கிறோம். வரி விதிப்பு வகைப்பாடு முறையில் பல வித குழப்பங்கள் இருந்ததால், தொழில் மற்றும் உற்பத்தி துறையினர் மீது, பல்வேறு வழக்குகள் நடந்தன. தற்போது அது எளிமையாக்கப்பட்டு உள்ளது.

வரி விலக்கு உதாரணமாக, உப்பு துாவிய சோளப்பொரிக்கு 5 சதவீத வரி, சாக்லேட் கலந்த சோளப்பொரிக்கு 12 சதவீதம் வரி இருந்தது. அதற்கு, உப்பு மற்றும் சர்க்கரை மீதான வரியே காரணம். தற்போது, பல உணவுப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


வரி விதிப்பில், அனைத்து உணவு பொருட்களுக்கும் 5 சதவீதம் என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தங்கள் கடந்த எட்டு மாதங்களாக செய்யப்பட்டுள்ளன. இனி, தொழில் துறையினர் வரி பதிவை, மூன்று நாட்களுக்குள் மேற்கொள்ள முடியும்.

வருமான வரி சட்டம், 1961ல் இயற்றப்பட்டது. அன்று முதல் இதுவரை உயர்த்தப்பட்டே வந்தது. முதல் முறையாக, 12 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிப்பது உள்ளிட்ட சீர்திருத்தங்களை செய்துள்ளோம்.

விவசாயிகள், சிறு குறு தொழில் செய்வோர், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்போருக்கு உதவும் வகையில், இந்த வரி சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கனவான, 2047க்குள், இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற வேண்டும் என்பதை நிறைவேற்றவே, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம்.


ஒவ்வொரு பெரிய நிறுவனமும், வரி சீர்திருத்தத்தை பின்பற்றி, மூலப்பொருள், உற்பத்தி பொருட்களின் விலையை குறைத்து, பொதுமக்களுக்கு பயன் கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு நிர்மலா பேசினார்.

நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், ''வர்த்தகர்கள் ஜி.எஸ்.டி., குறைப்பால், பொருட்களின் விலை எவ்வளவு குறைந்துள்ளது என்ற பட்டியலை, கடைகளின் முன் வைக்க வேண்டும். அப்போது தான், பொதுமக்களுக்கு வர்த்தகர்கள் மீது நம்பிக்கை ஏற்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us