Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ ஹிந்து தலைவர்கள் கொலை வழக்கில் தேடப்பட்ட பயங்கரவாதிகள் இருவர் கைது

ஹிந்து தலைவர்கள் கொலை வழக்கில் தேடப்பட்ட பயங்கரவாதிகள் இருவர் கைது

ஹிந்து தலைவர்கள் கொலை வழக்கில் தேடப்பட்ட பயங்கரவாதிகள் இருவர் கைது

ஹிந்து தலைவர்கள் கொலை வழக்கில் தேடப்பட்ட பயங்கரவாதிகள் இருவர் கைது

UPDATED : ஜூலை 02, 2025 08:00 AMADDED : ஜூலை 02, 2025 07:56 AM


Google News
Latest Tamil News
சென்னை: ஹிந்து முன்னணி அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு; அத்வானி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 'பைப் குண்டு' வைத்தது என, பல்வேறு வழக்குகளில் 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோர், ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில், மதுரையில் பால் வியாபாரி சுரேஷ், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பூசாரி முருகன், வேலுாரில் பா.ஜ., மருத்துவ பிரிவு செயலர் அரவிந்த் ரெட்டி, பா.ஜ., மாநில பொதுச்செயலர் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்டோர் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.

மேலும், மாநிலம் முழுதும் ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குறிவைத்து தாக்கப்பட்டனர். இது, போலீசாரை அதிர்ச்சியடைச் செய்தது. இதுகுறித்து, சி.பி.சி.ஐ.டி., பிரிவின் எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்தனர்.

இது தொடர்பாக, மதுரையைச் சேர்ந்த அல் - உம்மா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் உள்ளிட்டோர், ஆந்திர மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாத கும்பலின் தளபதியாக செயல்பட்டு வந்த, நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்; திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகமது அலி ஆகியோர் தப்பிவிட்டனர்.

மொத்த கொலைகளுக்கும் மூளையாக செயல்பட்டது அபுபக்கர் சித்திக் தான். ஹிந்து அமைப்பு தலைவர்கள் மற்றும் பா.ஜ., நிர்வாகிகளை எப்படி கொலை செய்ய வேண்டும்; போலீசாரிடம் சிக்காமல் இருப்பது எப்படி என்பது குறித்து, போலீஸ் பக்ருதீன் உள்ளிட்டோருக்கு அபுபக்கர் சித்திக் தான் கட்டளை பிறப்பித்துள்ளார் என்பதும் தெரியவந்தது.

அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி ஆகியோர், வெளிநாடுகளுக்கு தப்பி இருக்கலாம் என கூறப்பட்டது. தொடர் கொலைகள் நடப்பதற்கு முன், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை போலீசாரால் அபுபக்கர் சித்திக் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதனால், இவர் மும்பையில் பதுங்கி இருக்கலாம் என்றும் போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர்.

வடமாநில பயங்கரவாத கும்பல்களுடன், இருவருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதனால், இருவரும் மேற்கு வங்கம், குஜராத், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று இருக்கலாம் என்றும் தேடுதல் வேட்டை நடந்தது.

தொடர் விசாரணையில், 1995ம் ஆண்டு, தமிழகத்தில் நடந்த பல்வேறு வெடிகுண்டு சம்பவங்கள், மத ரீதியான கொலைகளுக்கு அபுபக்கர் சித்திக் திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. அதே ஆண்டில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில், ஹிந்து முன்னணி அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு; நாகூரில் தங்கம் முத்துகிருஷ்ணன் என்பவரின் வீட்டுக்கு பார்சல் வெடிகுண்டு அனுப்பி வெடிக்க வைத்தது, அபுபக்கர் சித்திக் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், 1999ல், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் உட்பட சென்னை, கோவை, திருச்சி மற்றும் கேரள மாநிலத்தில் ஏழு இடங்களில் வெடிகுண்டு வைத்த வழக்கிலும், அபுபக்கர் சித்திக் தான் முக்கிய குற்றவாளி என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.

கடந்த 2011ல், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டி தரைப்பாலம் வழியாக, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானியின் ரத யாத்திரை நடக்க இருந்த நிலையில், அங்கு அபுபக்கர் சித்திக் தலைமையில் தான் பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது.

பின், 2012ல், வேலுாரில் நடந்த டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை; 2013ல், கர்நாடக மாநிலம் பெங்களூரு பா.ஜ., அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்களும், அபுபக்கர் சித்திக் தலைமையில் தான் நடந்துள்ளன.

இந்த வழக்குகளில் தேடப்பட்டு வந்த அபுபக்கர் சித்திக் எங்கே பதுங்கி இருக்கிறார் என்பதை கூட, 30 ஆண்டுகளாக போலீசாரால் கண்டறிய முடியவில்லை. அதேபோல, முகமது அலி, யூனுஸ் மற்றும் மன்சூர் என்ற பெயர்களில், 1999ல் தமிழகம் மற்றும் கேரளாவில் ஏழு இடங்களில் வெடிகுண்டுகளை வைத்துள்ளார்.

இந்நிலையில், அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி ஆகியோர், ஆந்திர மாநிலம் அன்னமையா மாவட்டத்தில் பதுங்கி இருக்கும் தகவல், மத்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்தது. அவர்கள், அத்தகவலை உறுதி செய்த பின், தமிழக போலீசாருக்கு தகவலை தெரியப்படுத்தினர். ஆந்திராவுக்கு சென்ற தமிழக காவல் துறையின் ஏ.டி.எஸ்., பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார், இருவரையும் நேற்று கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us