கடலில் துார்வாரப்பட்ட மண்ணால் 28 ஏக்கரில் உருவானது நிலப்பரப்பு: துாத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை
கடலில் துார்வாரப்பட்ட மண்ணால் 28 ஏக்கரில் உருவானது நிலப்பரப்பு: துாத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை
கடலில் துார்வாரப்பட்ட மண்ணால் 28 ஏக்கரில் உருவானது நிலப்பரப்பு: துாத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை

துாத்துக்குடி:துாத்துக்குடி துறைமுக கடல் பகுதியில் துார் வாரப்பட்ட மண்ணை பயன்படுத்தி, 28 ஏக்கரில் புதிய நிலப்பரப்பாக மாற்றி, துறைமுக நிர்வாகம் சாதனைபடைத்துள்ளது.
துாத்துக்குடி, வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் மூன்றாவது வடக்கு சரக்கு தளத்தில், 14.20 மீட்டர் மிதவை ஆழம்கொண்ட பெரிய சரக்கு கப்பல்களை கையாள வசதியாக ஆழப்படுத்தும் பணி சமீபத்தில் நிறைவடைந்தது.
உள்துறைமுக பகுதியில் கப்பல் வரும் சுற்றுவட்ட பாதையை, 488 மீட்டரில் இருந்து 550 மீட்டராக ஆழப்படுத்தி, விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பெரிய வகை சரக்கு கப்பல் மற்றும் சரக்கு பெட்டக கப்பல்களை கையாளும் வசதியை துறைமுகம் பெற்றுள்ளது.
கடலில் ஆழப்படுத்தும் பணியால், துார் வாரப்பட்ட மண் வளங்களை வீணடிக்காமல், துறைமுகத்தின் நிலக்கரி சேமிப்பு கிடங்கு அருகில் மற்றும் காற்றாலை இறகுகளை சேமித்து வைக்கும் கிடங்கு பகுதியில், 8 லட்சம் கன மீட்டர் கொள்ளளவு கொண்ட துார் வாரப்பட்ட மண் வளங்களை பயன்படுத்தி, 28 ஏக்கர்புதிய நிலப்பரப்புஉருவாக்கப்பட்டுள்ளது.
துறைமுக ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோஹித் கூறியதாவது:
பொதுவாக ஆழப்படுத்தும் பணியில் துார்வாரப்பட்ட மண் வளங்கள் கழிவு பொருட்களாகவே கருதப்பட்டு வருகின்றன.
'கழிவில் இருந்து செல்வம்' என்ற புதிய அணுகுமுறையை பயன்படுத்தி, துார் வாரப்பட்ட மண்ணை கொண்டு நிலப்பரப்புகளை உருவாக்கியுள்ளோம்.
கழிவாக கருதப்படும் துார் வாரப்பட்ட மண் வளத்தை மறுசுழற்சி செய்து பயனுள்ளதாய் மாற்றியதில், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில்சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆழப்படுத்தும் பணியில் துார் வாரப்பட்ட மண் வளங்களை திட்டமிட்டு பயன்படுத்தியதால், சரக்கு தளங்களையும், சேமிப்பு கிடங்குகளையும் அமைப்பதற்கான பயனுள்ள நிலத்தை உருவாக்க முடிந்தது.
ஆழப்படுத்தும் போது கிடைத்த மண்ணை பயன்படுத்துவதால், சராசரியாக, 1 கன மீட்டர் நிலத்தை உருவாக்குவதற்கு, 600 ரூபாய் வரைசேமிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.