ரயில் முனையமாக மாறுகிறது திருவண்ணாமலை 'ஸ்டேஷன்'
ரயில் முனையமாக மாறுகிறது திருவண்ணாமலை 'ஸ்டேஷன்'
ரயில் முனையமாக மாறுகிறது திருவண்ணாமலை 'ஸ்டேஷன்'
ADDED : ஜூலை 05, 2025 12:42 AM

சென்னை:திருவண்ணாமலை ரயில் நிலையத்தை முனையமாக மாற்ற, தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில் நகரம் திருவண்ணாமலை. அங்குள்ள அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பவுர்ணமி கிரிவலத்தில், லட்சக்கணக்கானோர் பங்கேற்பது வழக்கம்.
எனவே, 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், இந்த ரயில் நிலையத்தை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது.
இதன்படி, 7.86 கோடி ரூபாய் செலவில், இந்த ரயில் நிலையத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து, திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. எனவே, பயணியர் தேவைக்கு ஏற்ப கூடுதல் ரயில்களை இயக்கவும், ரயில் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்தவும் பணிகள் நடந்து வருகின்றன.
மேலும், இந்த நிலையத்தை முனையமாக மாற்றவும் திட்டமிட்டுள்ளோம். இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு பணிகள் மேற்கொள்ள உள்ளோம்.
உரிய ஒப்புதலை பெற்று, ரயில்வே முனையமாக மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த ரயில் நிலையம் முனையமாக மாறினால், இங்கிருந்து பிற நகரங்கள், மாநிலங்களுக்கும் ரயில்களை இயக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.