வங்கதேச மானியம் குறைப்பால் திருப்பூர் திரும்பும் ஜவுளி ஆர்டர்கள்
வங்கதேச மானியம் குறைப்பால் திருப்பூர் திரும்பும் ஜவுளி ஆர்டர்கள்
வங்கதேச மானியம் குறைப்பால் திருப்பூர் திரும்பும் ஜவுளி ஆர்டர்கள்
ADDED : பிப் 10, 2024 07:48 PM

திருப்பூர்:வங்கதேச அரசு மானியங்களை குறைத்துள்ள காரணத்தால், பின்னலாடைக்கான அந்நாட்டுக்குரிய ஆர்டர்கள் திருப்பூரை நோக்கி திரும்புமென, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தில் வேகமாக வளர்ந்த நாடு வங்கதேசம். கடந்த 2002ம் ஆண்டில், அந்நாட்டின் மொத்த ஏற்றுமதியில், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி 77 சதவீதமாக இருந்தது.
வேலைவாய்ப்புக்கு ஜவுளித்தொழிலை மட்டுமே நம்பியிருப்பதால், அந்நாட்டு அரசும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. கடந்த 2016 முதல், சீனாவுக்கு அடுத்தபடியாக, உலக அளவில் அதிக ஜவுளி ஏற்றுமதி செய்யும் நாடாக வளர்ச்சி பெற்றுள்ளது.
வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் நடைமுறையில் இருப்பதால், வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதியாகி, இந்திய உள்நாட்டு சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
செலவினங்களை குறைக்கும் முயற்சியாக, ஏற்றுமதிக்கு வழங்கி வந்த ஊக்கத்தொகையை, வங்கதேசம் அதிரடியாக குறைத்துள்ளது. ஜவுளித்துறைக்கும் 4 சதவீதம் வரை மானியம் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறியதாவது:
சம்பள உயர்வு, அரசு மானியம் குறைப்பு போன்ற காரணங்களால், வங்கதேசத்தின் போட்டியை சமாளிக்கும் திறன் குறைந்து போயுள்ளது.
திடீரென உற்பத்தி செலவு அதிகரிக்கும் போது, ஆடைகளின் விலையை உயர்த்த நேரிடும். இந்தியா தரமான ஆடைகளை, நியாயமான விலைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
வங்கதேச அரசு மானியங்களை குறைத்துள்ளதால், அந்நாட்டுக்கு கிடைத்து வந்த ஆர்டர்கள், திருப்பூரை நோக்கி திரும்ப வாய்ப்புள்ளது.
குறிப்பாக, புதிய கோடைக்கால ஆர்டர்களை ஈர்க்க தீவிர முயற்சி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.