'காலம் கனிந்து விட்டது; கோட்டை விடக்கூடாது!'
'காலம் கனிந்து விட்டது; கோட்டை விடக்கூடாது!'
'காலம் கனிந்து விட்டது; கோட்டை விடக்கூடாது!'
UPDATED : ஜன 13, 2024 01:45 AM
ADDED : ஜன 13, 2024 12:22 AM

சென்னை: ''பிரதமராக இருந்தாலும், தேசிய தலைவராக இருந்தாலும், 'பூத்' கமிட்டி தலைவராக இருந்தாலும் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை, பா.ஜ., மட்டும் தான் கொண்டுள்ளது; தி.மு.க.,வை எதிர்க்கக்கூடிய ஒரே சக்தி பா.ஜ.,தான்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழக பா.ஜ.,வின் மத்திய சென்னை லோக்சபா தொகுதி செயல் வீரர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில்நடந்தது.
தனி திறமை
அதில், அண்ணாமலை, மத்திய சென்னை தொகுதி அமைப்பாளர் வினோஜ் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், அண்ணாமலை பேசியதாவது:
பா.ஜ.,வை சேர்ந்த 400 எம்.பி.,க்கள் வெற்றி பெறும் போது, சென்னையிலும் எம்.பி., இருப்பர். பிரதமர் மோடியின் அருகில் உள்ள மத்திய அமைச்சர்கள், தங்களின் தனி திறமையால் முன்னேறியவர்கள். பா.ஜ.,வில் எந்த வேட்பாளரை நிறுத்தினாலும், அவரின் பெயர் மோடி.
நம் வேட்பாளருக்கு ஜாதி கிடையாது. லஞ்சம், குடும்பம், ஜாதி, அடாவடி ஆகிய நான்கு கால்களில் தான், தி.மு.க., அமர்ந்துள்ளது. ஆனால், பா.ஜ.,வுக்கு ஜாதி, மதம் இல்லை. மோடி மூன்றாவது முறையாக பிரதமராக வர வேண்டும் என்று, மக்கள் முடிவு செய்து விட்டனர்.
சேர்ந்து பயணிப்போம்
தேசிய ஜனநாயக கூட்டணி என்பது பா.ஜ., கட்டிய வீடு. எங்களுடன் வாங்க, உறவினராக வாங்க, சேர்ந்து பயணிப்போம் என்றோம். சிலர் வந்து, நம்முடன் சாப்பிட்டனர்; நம் வீட்டிலேயே தங்கியுள்ளனர்.
சிலர் வந்தனர் சாப்பிட்டனர், கிளம்பினர்; வெளியே சென்ற ஒருவர், 'சாப்பாடு சரியில்லை, வீடு சரியில்லை' என்று சொல்வது அவரின் கருத்து.
தேசிய ஜனநாயக கூட்டணி நம்முடையது. அதில், கூட்டணி கட்சிகள் இருக்கின்றன. நம் கூட்டணியில் யாரெல்லாம் மோடியை ஏற்று வருகின்றனரோ, அவர்கள் நம்முடன் பயணம் செய்யலாம். கதவு, ஜன்னல் திறந்து வைத்துள்ளோம். பிரதமராக மோடி வர வேண்டும் என்று கருதுபவர்கள் எங்களுடன் வரலாம்.
அனைவரும் சமம்
பா.ஜ.,வில் மட்டும் தான் பிரதமராக இருந்தாலும், தேசிய தலைவராக இருந்தாலும், பூத் கமிட்டி தலைவராக இருந்தாலும் அனைவரும் சமம் என்ற கோட்பாடு உள்ளது.
சென்னை மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது, இங்குள்ள எம்.பி.,க்கள், டில்லியில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க சென்று விட்டனர். பா.ஜ.,வினர் மக்களுக்கு உதவி செய்தனர்.
தமிழகத்தில், 25 தொகுதிகளை தாண்டி பா.ஜ., வெற்றி பெறும். தி.மு.க.,வை எதிர்க்கக்கூடிய ஒரே சக்தி பா.ஜ., தான். நமக்கான காலம் கனிந்து வருகிறது; கோட்டை விட்டு விடக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.