3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை
3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை
3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை

சென்னை: 'தமிழகத்தில் சில இடங்களில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
அதன் அறிக்கை: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், கடலுார் மாவட்டம் லால்பேட்டை மற்றும் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில், அதிகபட்சமாக, 6 செ.மீ., மழை பெய்து உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு, சீர்காழியில் தலா, 5; கடலுார் மாவட்டம் கே.எம்.கோயில், நீலகிரி மாவட்டம் செருமுள்ளி, மயிலாடுதுறை தானியங்கி வானிலை நிலையம் ஆகிய இடங்களில், தலா, 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
வங்கக்கடலில் அந்தமான் மற்றும் மியான்மரை ஒட்டிய பகுதிகளில், அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாக உள்ளன. இதனால், தமிழகத்துக்கு நேரடி பாதிப்பு எதுவும் இருக்காது.
இருப்பினும், தமிழகத்தின் வடமாவட்டங்களில், ஒரு சில இடங்கள், தென் மாவட்டங்களில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோரப் பகு திகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்கக் கடல், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடலை ஒட்டிய பகுதிகளில், இன்றும், நாளையும் மணிக்கு, 40 முதல், 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே மணிக்கு, 60 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசும்.
எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.