பசுமை தமிழகம் இயக்கத்தின் வாயிலாக 30 லட்சம் பாரம்பரிய மரக்கன்றுகள் நடவு
பசுமை தமிழகம் இயக்கத்தின் வாயிலாக 30 லட்சம் பாரம்பரிய மரக்கன்றுகள் நடவு
பசுமை தமிழகம் இயக்கத்தின் வாயிலாக 30 லட்சம் பாரம்பரிய மரக்கன்றுகள் நடவு
ADDED : செப் 22, 2025 05:44 AM

சென்னை: 'பசுமை தமிழகம் இயக்கம் வாயிலாக, கடந்த இரண்டு ஆண்டுகளில், 30 லட்சம் பாரம்பரிய வகை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன' என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துஉள்ளனர்.
தமிழகத்தின் ஒட்டு மொத்த பசுமை பரப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 'பசுமை தமிழகம் இயக்கம்' 2022ல் துவக்கப்பட்டது.
இதன் வாயிலாக, எட்டு ஆண்டுகளில், 12,000 சதுர கி.மீ., பரப்பளவில், 265 கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
வனத்துறை சார்பில், இந்த இயக்கம் துவக்கப்பட்டாலும், அரசின் பல்வேறு துறைகள் மட்டுமல்லாது, தனியார் நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், தனி நபர்கள் என பல்வேறு தரப்பினரும் இதில் இணைக்கப்பட்டனர்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காலி இடங்கள், அரசு துறைகளின் காலி இடங்கள், தனியாருக்கு சொந்தமான காலி இடங்கள் என, பல்வேறு பகுதிகளில், மரங்கள் நடும் பணி நடந்தது. இவற்றை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வனத்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
பசுமை தமிழகம் இயக்கத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில், 1,730 சதுர கி.மீ., பரப்பளவில், 10.86 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில், பாரம்பரிய வகையை சேர்ந்த, 30 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.
குறிப்பாக, வில்வம், நாவல், நீர் மருது, அரச மரம் போன்றவை அதிக அளவில் நடப்பட்டுள்ளன. இதுதவிர தேக்கு, குமில், வேம்பு, செம்மர கன்றுகள், 9.20 கோடி அளவுக்கு நடப்பட்டுள்ளன. பாரம்பரிய வகை மரக்கன்றுகளை அதிகமாக உற்பத்தி செய்ய, ஐந்து இடங்களில் நவீன நர்சரிகளும் விரைவில் துவக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.