தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு குறித்து கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு குறித்து கேள்வி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு குறித்து கேள்வி
ADDED : ஜன 11, 2024 06:52 AM

சென்னை: துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகளுக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டது குறித்து, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கடந்த 2018ல், துாத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது.
இதில், 13 பேர் பலியாகினர். சம்பவம் தொடர்பாக, தேசிய மனித உரிமை ஆணையம், வழக்கை விசாரணைக்கு எடுத்தது. ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அளித்த அறிக்கை அடிப்படையில் வழக்கை முடித்தது.
இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ஹென்றி திபேன் வழக்கு தொடர்ந்தார். மீண்டும் தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க கோரியிருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் நிஷா பானு, என்.மாலா அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தபோது, 'ஒரு அதிகாரிக்கு எதிராக மட்டும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது; மற்றவர்களுக்கு எதிராக கைவிடப்பட்டதா?' என, கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, வழக்கு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில்குமார் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளின் பட்டியல், தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை, தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்தது நியாயம் தானா என, நீதிபதிகள் கேட்டனர்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிகளுக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இவ்வழக்கில் சேர்த்து மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 19க்கு தள்ளி வைத்தனர்.