செல்லமே: ஏர்போர்ட்ல ஒரு காட்சி; அன்பிற்கு இதுவே சாட்சி!
செல்லமே: ஏர்போர்ட்ல ஒரு காட்சி; அன்பிற்கு இதுவே சாட்சி!
செல்லமே: ஏர்போர்ட்ல ஒரு காட்சி; அன்பிற்கு இதுவே சாட்சி!
UPDATED : பிப் 10, 2024 12:17 PM
ADDED : பிப் 10, 2024 02:40 AM

வெளிநாட்டு பயண பரபரப்பில் பயணிகள் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருக்க, அனைவர் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அங்கு ஒரு சம்பவம். தன்னந்தனியே கூட்டத்துக்குள் நாலுகால் பாய்ச்சலில் பாய்ந்தோடிய அந்த முசுமுசு நாய்க்குட்டி, வெளிநாட்டிலிருந்து விமானத்தில் வந்திறங்கி நடந்து வந்த இளம்பெண்ணின் மீது தாவி தோளில் ஏறியது.
வாஞ்சையுடன் அவர் மார்போடு வாரி அணைத்து முகத்தோடு முகம் புதைத்து முத்தமிட, வாலை ஆட்டியவாறே அதுவும் கொஞ்சி குலாவி முத்தமழை பொழிந்தது. அனைவருக்கும் ஆச்சரியம். ஒருவரை ஒருவர் பார்த்து பார்வைகளால் வியப்பை பரிமாறிக்கொண்டனர்.
இந்தக்காட்சி கேரள மாநிலம் கொச்சி ஏர்போர்ட்டில்... அந்த இளம்பெண், அவந்திகா. பாய்ந்தோடிய பாசக்கார நாய்க்குட்டி, சிட்சூ!
இதை தனது செல்லப்பிராணிக்கான, 'பிரவுனி வூப்ஸ்' என்ற இன்ஸ்ட்டா தனிப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார், அவந்திகாவின் சகோதரி நந்தனா. இவர் தற்போது, லண்டனில் வசிக்கிறார். அவந்திகா சொந்த ஊருக்கு திரும்பியபோது நடந்த வியத்தகு காட்சி தான் கொச்சின் ஏர்போர்ட்டில் நடந்தது...
நந்தனா கூறுகையில்...
எங்கள் அப்பா பிரேம்குமார் கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட ஜி.எஸ்.டி., துணை கமிஷனராக உள்ளார். அம்மா ரஜனி வீட்லதான் இருக்காங்க. நான், சகோதரி... என, மொத்தமே நாலு பேர் கொண்ட பேமிலி. எங்கள் உலகத்துக்குள் 35 நாள் குழந்தையாக வந்தான் பிரவுனி. இப்போ அவனுக்கு இரண்டரை வயசு. குட்டியா அழகான கண்களோட, எப்போவும் சுத்தி சுத்தி வர்ற பிரவுனியோட சேட்டைகளை பதிவு செய்றதுக்கு தான், 'இன்ஸ்ட்டாகிராம் பேஜ்' உருவாக்கினேன். இவனை பார்த்தாவே பாசிட்டிவ் வைப் வரும். இப்போ, நான் கனடால இருக்கேன்.
ஆனா, சி.சி.டி.வி., கேமரா மூலமா தினமும் பிரவுனிய பார்த்துக்கிட்டு, பேசிக்கிட்டு இருக்கேன். பல மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், என்னோட குரல் கேட்டாலோ, என் பேர சொன்னாவோ, உடனே உடம்பை சிலிப்பிக்கிட்டு தேட ஆரம்பிச்சிடுவான். ரொம்ப பொசசிவ்வா இருப்பான். அவன பாத்தாவே, எவ்ளோ ஸ்ட்ரஸ் இருந்தாலும், இன்ஸ்ட்டன்ட்டா சந்தோஷம் வந்துடும்,'' என்றார்.
எதையாவது எதிர்பார்த்தே பழகுற மனுஷங்க மத்தியில, எவ்வித எதிர்பார்ப்புமே இல்லாம அன்பு செலுத்துறதும், அடித்தாலும் விலகாமல் திரும்ப ஓடிவந்து ஒட்டிக்கொள்வதும் செல்லப்பிராணிதாங்க... அந்த 'லவ்'தாங்க நமக்கு வேண்டும்.
![]() |
லவ் பண்ணுங்க... பண்ணிகிட்டே இருங்க...
அன்பு காட்டுவோம்
அன்பை பகிர்ந்து ஆராதிப்பதற்கான தினம், பிப்.,14
'வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்' என்றார், வள்ளலார் பெருமகனார். இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு உயிர் மீதும் நாம் அன்பு பகிர வேண்டுமென்று பறைசாற்றும் இவ்வாசகம் பொன்னெழுத்துக்களால்
பொறிக்கப்பட வேண்டியவை. அவ்வகையில், நமக்காக உயிரையே
தரத்துணியும் செல்லப்பிராணிகள் மீது பேரன்பு செலுத்தி கொண்டாடுவோமென முழங்குகின்றனர் 'பெட்' ஆர்வலர்கள்!
'பெட்'களின் பிறந்த நாள், நமக்கான பிறந்த நாள் உள்ளிட்ட கொண்டாட்டங்களின் போது, அவற்றுக்கு எதைத் தரவேண்டும்; எதை தரக்கூடாது என்பதை நாம் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்க வேண்டியது அவசியம். பிரியமானவர்களின் நலனில் அக்கறை காட்டிட தவறிவிடக்கூடாதல்லவா... அதற்கான டிப்ஸ் இதோ:
ஸ்வீட் எடு; கொண்டாடுங்கற டயலாக் பெட்ஸ்களுக்கு பொருந்தாது. குறிப்பா நாய், பூனைகள், சாக்லெட் சாப்பிட்டா, அது விஷமாகிடும். இதேபோல, சில துளி ஆல்கஹால், பெட்ஸ் சாப்பிட்டா கூட இறப்பை ஏற்படுத்தும் அளவுக்கு, மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்கின்றனர், கால்நடை மருத்துவர்கள்.
அன்பை பரிமாறி கொள்ளவும் செலிபிரேட் செய்யவும், வீட்டை டெக்கரேட் செய்வது, போட்டோஷூட் நடத்துவது டிரெண்டாகி வருகிறது. ஆனால், செலோடேப், கத்திரிக்கோல், கலர் பேப்பர்ஸ், ஆகியவை உங்க வீட்டு பெட்ஸ்சின் கால்களிலோ, நகங்களிலோ சிக்கி கொள்ளாமல் பார்த்து கொள்வது அவசியம்.
உங்கள் அன்புக்குரியவர்களிடம் இருந்து 'வேலன்டைன் டே'ல பெறும் பூக்கள், பொக்கே ஆகியவற்றை, பெட்ஸ்கள் தொட முடியாத உயரத்தில் வைப்பது அவசியம். குறிப்பாக பூனைகள், இத சாப்பிட்டால், கிட்னிக்கு ஆபத்தாம்.
பெட்ஸ்களுக்கு கொடுக்கறதுக்குன்னு நிறைய வெரைட்டி டிரீட்ஸ் கடைகளில் கிடைக்குது. இதோட அவை ஹெல்தியா, 'பிட்'டா இருக்க உப்பு சேர்க்காமல் சிறிது மஞ்சள் துாள் கலந்து, காய்கள், சிக்கன், மட்டன், முட்டையோட நிறைய அன்பையும் சேர்த்து, சமைத்து கொடுத்து அசத்தலாம்.
* வீட்டுக்குள்ளே இருக்கற பெட்ஸ்களை பிக்னிக் கூட்டிட்டு போகலாம். வெளியிடங்களுக்கு டிராவல் செய்தால், அவை குஷியாகிடும். பெட்ஸ்களுக்கென பிரத்யேக ரெசார்ட்ஸ்சும் இருக்கு. முன்கூட்டியே புக்கிங் செய்து, ஊர் சுற்ற கிளம்பலாம்.
வேலன்டைன் தீம் கொண்ட டிரஸ், கேப், கூலர்ஸ் என எக்கச்சக்க பொருட்கள் கடைகளில் விற்பனைக்கு வந்துவிட்டது. உங்க செல்லத்துக்கு கிப்ட் கொடுத்து சர்பிரைஸ் பண்ணுங்க. அதோட சேட்டைய பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
![]() |
பப்பி வாங்க போறீங்களா?
நீங்கள் குடியிருக்கும் இடத்தை பொறுத்து தான் பிரீட் தேர்வு செய்ய வேண்டும். நாய்களில் டாய், ஸ்மால், மீடியம், லார்ஜ் 'ஜெயன்ட்' என அதன் உடல் வளர்ச்சியை பொறுத்து 4 வகையாக பிரிக்கலாம்.
அபார்ட்மெண்ட்டில் குடியிருப்போருக்கு டாய் பிரீட் ஏற்றது. டாய் பிரீட் வாங்குவதாக இருந்தால் பிறந்து 10-12 வாரங்களான பப்பி வாங்கலாம். மற்ற பிரீட்கள், 6-8 வாரங்கள் ஆகியிருந்தால்
வாங்கலாம்.
*காது, காதுமடலின் வெளிப்புறம் உட்புறங்களில் சிவப்பாக தடித்து இருக்க கூடாது
* காதில் நாற்றம் எதுவும் வரக்கூடாது.
* மூக்கு, கண்ணில் நீர் வடியாமல் இருக்க
வேண்டும். தும்மல் இருக்க கூடாது.
* தோல்முடி உதிராமல், சொட்டை இல்லாமல்,
பளபளப்பாக இருக்க வேண்டும்.
* கண்கள் விழிப்போடு பிரகாசமாக இருக்க
வேண்டும்.
ஹெல்தியான பப்பி வாங்கி வந்தால் மட்டும் போதாது. ஒரு வயது வரை, உணவு, பராமரிப்பு முறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும். பிறந்து மூன்று மாதங்கள் வரை, 15 நாட்களுக்கு ஒருமுறை குடல்புழுநீக்க மருந்து கொடுக்கணும். 4-12 மாதங்கள் ஆன பப்பிக்கு மாதம் ஒருமுறை குடல்புழு நீக்கம் செய்யணும்.
வீட்டிலே தயாரித்து கொடுக்க, இருவகை உணவு முறைகள் உள்ளன.
* முதல்வகை உணவு: மில்க் பவுடர் 200 கிராம், கிரீம் 200 மி.லி, அரிசி கஞ்சி 200 மி.லி, கொதிக்க வைத்து ஆறிய தண்ணீர் 400 கிராம் கொடுக்கலாம்.
* இரண்டாம் வகை உணவு, 700 மி.லி பசும்பால், கிரீம் 200 மி.லி, முட்டை மஞ்சள் கரு, அரிசி கஞ்சி 50 மி.லி கொடுக்கலாம். இதை ஒவ்வொரு வகை பிரீடுக்கும், தினசரி எத்தனை முறை பிரித்து கொடுக்க வேண்டுமென்ற அளவீடு உள்ளது.
இதுதவிர ரெடிமேட் உணவுகளும் பப்பிகளுக்கு கடைகளில் விற்கப்படுகிறது. அதில் கொடுக்கப்படும் அளவீடு மட்டுமே கொடுக்க வேண்டும். ரெடிமேட் உணவு கொடுத்தால், வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகள் கொடுக்க தேவையில்லை.
![]() |
- பிரபாகரன்,
அரசு கால்நடை
மருத்துவர், கோவை