'தமிழ்நாடு' என்ற வார்த்தை அரசு பஸ்களில் நீக்கம்
'தமிழ்நாடு' என்ற வார்த்தை அரசு பஸ்களில் நீக்கம்
'தமிழ்நாடு' என்ற வார்த்தை அரசு பஸ்களில் நீக்கம்

சென்னை:அரசு போக்குவரத்து கழக பஸ்களின் முகப்பு பகுதிகளில் எழுதப்பட்டிருந்த, 'தமிழ்நாடு' என்ற வார்த்தை திடீரென நீக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் எட்டு போக்குவரத்து கழகங்கள் உள்ளன. சென்னை மாநகர போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம் தவிர, மற்ற ஆறு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் பஸ்களின் முகப்பு பகுதிகளில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம்; தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம்; தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம்; தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை; தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை என, எழுதப்பட்டு இருக்கும்.
தற்போது, 'தமிழ்நாடு' என்ற வார்த்தை நீக்கப்பட்டு, அரசு போக்குவரத்து கழகம் என்று மட்டும் எழுதப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'தமிழ்நாடு என்ற வார்த்தையை நீக்கும் போது, அரசு போக்குவரத்து கழகம் என்ற பெயர் பெரிதாகவும், பயணியர் எளிதாக பார்க்கக் கூடியதாகவும் உள்ளது.
'எனினும், அனைத்து பஸ்களிலும், அரசு போக்குவரத்து கழகம் என்பதில் மாற்றம் செய்யவில்லை. இந்த மாற்றத்தில், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை' என்றனர்.
அ.தி.மு.க.வின், அண்ணா தொழிற்சங்க செயலர் கமலக்கண்ணன் கூறியதாவது:
தமிழை வளர்ப்பதாக கூறும் தி.மு.க., அரசு, போக்குவரத்து கழக பஸ்களில், பல ஆண்டுகளாக இருந்து வரும், 'தமிழ்நாடு' என்ற வார்த்தையை நீக்குவது ஏன் என்று தெரியவில்லை.
'தமிழ்நாடு' அரசு போக்குவரத்து கழகம் என்பது தான், நம் மாநில அரசு பஸ்களுக்கான அடையாளம்.
நம் மாநில அரசு பஸ்கள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் போது, அரசு பஸ் என்று மட்டும் எழுதி இருந்தால், எந்த மாநில பஸ் என்று தெரியாமல் பயணியர் குழப்பம் அடைவர்.
எனவே, நம் மாநில அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, தனி அடையாளமாக இருக்கும், 'தமிழ்நாடு' என்ற வார்த்தையை, மீண்டும் இணைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.