வடகிழக்கில் தொடரும் வெள்ள பாதிப்பு
வடகிழக்கில் தொடரும் வெள்ள பாதிப்பு
வடகிழக்கில் தொடரும் வெள்ள பாதிப்பு
ADDED : ஜூன் 04, 2025 01:51 AM

குவஹாத்தி :கடும் மழை மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வடகிழக்கு மாநில முதல்வர்களை, தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலைமையை கேட்டறிந்த பிரதமர் மோடி, தேவையான உதவிகளை செய்வதாக உறுதி அளித்தார்.
வடகிழக்கு மாநிலங்களான அசாம், மணிப்பூர், திரிபுரா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம், மேகாலயாவில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது.
ஆறு லட்சம் பேர்
கடந்த மூன்று நாட்களில் மட்டும் மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் ஆறு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அசாமில், 19 மாவட்டங்களில், 764 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு, 3.6 லட்சம் மக்கள் துயரத்தில் உள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 10 ஆக உயர்ந்துள்ளது.
பல்வேறு இடங்களில் நுாற்றுக்கணக்கான குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. விளைநிலங்கள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளன.
இதேபோன்று அருணாச்சல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. பல்வேறு சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. போக்குவரத்து வசதி துண்டிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் படகுகள் வாயிலாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
நிவாரண முகாம்கள்
வடகிழக்கு மாநிலங்களில், 100க்கும் மேற்பட்ட ஆறுகள் அபாய அளவைத் தாண்டி பாய்கின்றன. இதனால், கரையோரம் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமங் மற்றும் மணிப்பூர் கவர்னர் அஜய் குமார் பல்லா ஆகியோரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.
அப்போது வெள்ள நிலவரம், பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். அவர்கள் மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் விளக்கினர்.
கனமழையை தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கு, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என, பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.