Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/'டாஸ்மாக்' ஊழல் தமிழக அரசியலையே. புரட்டி போடும்

'டாஸ்மாக்' ஊழல் தமிழக அரசியலையே. புரட்டி போடும்

'டாஸ்மாக்' ஊழல் தமிழக அரசியலையே. புரட்டி போடும்

'டாஸ்மாக்' ஊழல் தமிழக அரசியலையே. புரட்டி போடும்

ADDED : மார் 22, 2025 10:36 PM


Google News
Latest Tamil News
சென்னை : ''டாஸ்மாக் ஊழல், இந்தியாவை உலுக்கக்கூடியதாக, தமிழக அரசியல் சரித்திரத்தை புரட்டிப் போடக்கூடியதாக இருக்கும்,'' என்று கூறிய தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி:

தமிழகத்திற்கு அண்டை மாநிலங்களுடன் பல பிரச்னைகள் உள்ளன. கேரளா உடன் முல்லை பெரியாறு பிரச்னை பல ஆண்டுகளாக உள்ளது. பேபி அணையை இன்னும் சீரமைக்க முடியாமல் தவிக்கிறோம். இதனால், லட்சக்கணக்கான தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தென்காசியில் செண்பகவள்ளி அணையை சரிசெய்வதாக, தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தும் சரிசெய்யாமல் உள்ளது. இதை சரிசெய்யாததால், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பிரச்னை உள்ளது.

கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள், மனிதக் கழிவுகள், மிருகக் கழிவுகள் எடுத்து வரப்பட்டு, தமிழகத்தில் கொட்டப்படுகின்றன.

கோட்டைவிட்டுள்ளார்


கர்நாடகாவை பொறுத்தவரை, நீண்ட நாள் பிரச்னையாக காவிரி நீர் உள்ளது. 'மேகதாது அணை கட்டுவோம்' என, கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தும், அதற்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளை முழுதுமாக கோட்டை விட்டுள்ளார். கேரளாவுக்கு நான்கு முறை சென்றும், ஒரு முறை கூட தமிழக பிரச்னையை முதல்வர் பேசவில்லை.

தொகுதி மறுசீரமைப்பில், தமிழகத்திற்கு எந்த பிரச்னையும் வரப் போவதில்லை. தென் மாநிலங்கள், ஒரு தொகுதி கூட இழக்கப் போவதில்லை. பல பிரச்னைகள் இருக்கும் போது, அதை மறைத்து, தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தை ஸ்டாலின் நடத்துகிறார்.

தமிழகத்தில் படுகொலை நடக்காத நாளே இல்லை. பாலியல் வன்கொடுமை நடக்காத நகரமே இல்லை. தமிழகத்தில் ஜாதி அடிப்படையில் மக்கள் தொகையை கணக்கெடுக்க வேண்டும் என்று பல கட்சிகள் கூறுகின்றன.

தெலுங்கானா முதல்வர் கூட்டத்திற்கு வந்திருக்கிறார். அவர் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அதன் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஆனால், தமிழக முதல்வர் இதை செய்யாமல், மத்திய அரசின் மீது பழி போடுகிறார்.

முல்லை பெரியாறு, பந்திப்பூர் இரவு நேர போக்குவரத்துக்கு கட்டுப்பாடு பிரச்னை உள்ளிட்டவை தொடர்பாக, தமிழகம் வந்துள்ள அண்டை மாநில முதல்வர்களிடம் ஸ்டாலின் பேசி, தமிழக எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.

முதல்வர் ஸ்டாலின், அரசியல் 'டிராமா'வுக்காக இந்த கூட்டத்தை நடத்துகிறார். இந்த கூட்டம் முடிந்த பின், மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டும் வகையில், அந்தந்த மாநில முதல்வர்களுடன் பேச வேண்டும்.

மோடி எதிர்க்கிறார்


மாநிலத்தின் வளர்ச்சியை முதல்வர் முழுதுமாக விட்டுக் கொடுத்துள்ளார். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது காங்கிரஸ் கொண்டு வந்தது. இதை, பிரதமர் மோடி எதிர்க்கிறார். விகிதாச்சாரம் அடிப்படையில் நடத்தப்படும் என்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தெரிவித்து விட்டார். எனவே, எந்த ஒரு மாநிலத்திற்கும் ஏற்றமும், இறக்கமும் இருக்காது.

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு வராது என்று தெரிவித்து விட்ட நிலையில், தி.மு.க., சொல்லும் காரணம் தவறு. மம்தா இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளார். வெறும் ஏமாற்று வேலை, பித்தலாட்டம் வேலை மட்டும் செய்து, இந்த நாடகத்தை தி.மு.க., இன்று அரங்கேற்றி கொண்டிருக்கிறது.

'டாஸ்மாக்' ஊழலில் நிச்சயமாக கைது செய்யப்படுவர். '2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் முதல் நாளே கைது செய்தனரா? எந்த ஒரு வழக்குமே, எந்த ஒரு சோதனையுமே, அன்றே கைது செய்ய மாட்டார்கள்.

கனிமொழி வெளியே வந்து விட்டாலும், விரைவு நீதிமன்றத்தில் மேல்விசாரணை நடக்கிறது. 'சோதனை நடத்தினீர்கள், இரவே ஏன் கைது செய்யவில்லை? அப்படியானால் நாங்கள் குற்றவாளிகள் இல்லை' என்ற தி.மு.க.,வினரின் வாதத்தை ஏற்க முடியாது. ஒரு சோதனை முடிந்ததும், தகவல் சேகரிக்கின்றனர்; ஆவணங்களைஎடுக்கின்றனர், 'செக்' செய்த பின், தொடர்ந்து விசாரணை நடக்க போகிறது. செந்தில்பாலாஜியின் கைது ஒரே நாளில் நடந்ததா; சோதனை எப்போது நடந்தது?

அதனால், தி.மு.க.,வினர் பகல் கனவு கண்டு விட்டு, 'ஊழல் பண்ணிட்டோம், தப்பித்து விட்டோம்' என்று, யார் நினைத்தாலும், அமலாக்கத் துறை விடக்கூடாது என்பது எங்கள் கோரிக்கை. யார் ஊழல் செய்திருந்தாலும், அமலாக்கத்துறை கைது செய்ய வேண்டும்.

அதுவும், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் என்ற வாதத்தை, பா.ஜ., முன்வைத்து வருகிறது. நிச்சயமாகவே, டாஸ்மாக் ஊழல் இந்தியாவை உலுக்கக் கூடியதாக, தமிழக அரசியல் சரித்திரத்தை மாற்ற கூடிய ஊழலாக இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை. அதற்கான ஆதாரங்கள் உள்ளன.

'அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்திருப்பது, எங்களுடைய ஆட்சி காலம் இல்லை. எங்களுடைய காலத்தில் போட்ட வழக்கு இல்லை' என்கிறது தி.மு.க., அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் போடப்பட்ட பல எப்.ஐ.ஆர்.,கள் குறிப்பிடப்பட்டு உள்ளன. அதையே தி.மு.க., மறைத்து, எங்களுக்கும், அதற்கும் தொடர்பு இல்லை என்று கூறுகிறது.

ஒரு, 'குவார்ட்டர் பாட்டிலுக்கு, 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதை பற்றி அனைவரும் பேசுகின்றனர். பா.ஜ., இந்த பிரச்னையை எடுத்த பிறகு தான், மது கடைகளுக்கு செல்பவர்களுக்கு எம்.ஆர்.பி., விலை கிடைக்கிறது. ஜெகத்ரட்சகன் வீட்டில், 2019ல் சோதனை நடந்த போதே, அவரின் சாராய ஆலையில், 1,000 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக, வருமான வரித்துறை தெரிவித்தது.

அமலாக்க துறையும் இங்கு தான் இருக்க போகிறது, தி.மு.க.,வும் இங்கு தான் இருக்க போகிறது. நானும் இங்கு தான் இருப்பேன். வரும் காலத்தில் இந்த ஊழலின் பரிமாணத்தை பார்க்க போகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ.,வினர் வீடுகளில்

கருப்பு கொடி போராட்டம்சென்னையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தொகுதி மறுசீரமைப்பு கூட்டத்தை கண்டித்து, தமிழக பா.ஜ.,வினர் தங்களின் வீடுகள் முன் நின்று, நேற்று கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை அக்கரை அருகில் உள்ள தன் வீடு முன், அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட்டார். இதேபோல, மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில துணை தலைவர் சக்கரவர்த்தி உள்ளிட்ட கட்சியினர் தங்கள் வீடுகள் முன், கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.நகர் கமலாலயம் முன் நடந்த போராட்டத்தில், மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us