Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ பள்ளி மாணவன் சாவில் தொடரும் மர்மம்

பள்ளி மாணவன் சாவில் தொடரும் மர்மம்

பள்ளி மாணவன் சாவில் தொடரும் மர்மம்

பள்ளி மாணவன் சாவில் தொடரும் மர்மம்

ADDED : ஜூலை 02, 2025 04:00 AM


Google News
Latest Tamil News
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே தனியார் பள்ளி மாணவன் இறப்பில், மாணவன் காரை விட்டு இறங்கவில்லை என, டிரைவர் கூறிய நிலையில், டிபன் பாக்ஸ் காலியாக இருந்தது எப்படி என, பெற்றோர் கேள்வி எழுப்புவதால் மர்மம் நீடிக்கிறது.

சிவகங்கை மாவட்டம், வேங்கைப்பட்டியை சேர்ந்த மாணவன் அஸ்விந்த், சிங்கம்புணரி ஜெஸ்ரில் தனியார் பள்ளியில் ஜூன் 30ல் மர்மமான முறையில் இறந்தார்.

ரத்த காயங்களுடன் அவரது உடலை சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் போட்டு விட்டு, பள்ளி நிர்வாகத்தினர் ஓடிவிட்டனர். நீதி விசாரணை கோரி, உறவினர்கள் 7 மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர்.

அமைச்சர் பேச்சு


தற்காலிக சமரசம் ஏற்பட்டு, மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

நேற்று காலை மாணவனின் தந்தை பாலமுருகன், உறவினர்கள் போலீஸ் நிலையம் முன் கூடினர். மாணவனை அழைத்துச் சென்ற அதே காரில் தான், உடலையும் மருத்துவமனைக்கு கொண்டு வந்து போட்டுள்ளனர்.

அந்த காரில் உள்ள தன் மகனின் ஸ்கூல் பேக், சாப்பாடு பை ஆகியவற்றை சோதனை செய்ய வலியுறுத்தினர்.

தடயவியல் அலுவலர் காரை திறந்து ஆய்வு செய்தபோது, மாணவனின் மதிய உணவு டிபன் பாக்ஸ் காலியாக இருந்தது. புத்தக பையை டி.எஸ்.பி., செல்வகுமார் உள்ளே எடுத்துச்சென்றார்.

அதை வெளியில் வைத்தே திறந்து காட்ட பெற்றோர் வலியுறுத்தினர். அதற்கு டி.எஸ்.பி., மறுத்தார். இதனால் உறவினர்கள் போலீஸ் நிலைய வாசலில் மறியலில் ஈடுபட்டனர்.

பஸ் ஸ்டாண்ட் அருகே பெண்கள் மறியல் செய்தனர். மதியம், 2:45 மணிக்கு அமைச்சர் பெரியகருப்பன், சப்- கலெக்டர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர்.

அவர்களை சூழ்ந்து உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் பெரியகருப்பன், மாணவனின் பெற்றோரை தன் காரில் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று சமரச பேச்சு நடத்தினார்.

மறியலால் முதல் நாள் 7 மணி நேரம், நேற்று 4 மணி நேரம் காரைக்குடி -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

நடந்தது என்ன?


அஸ்விந்த் உடலை மருத்துவமனையில் போட்டுவிட்டு பள்ளி நிர்வாகத்தினர் ஓட்டம் பிடித்த நிலையில், மருத்துவமனை ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

டிரைவர் ஜான் பிரிட்டோவிடம் போலீசார் விசாரித்த போது, பள்ளி வேன் பழுதான நிலையில், ஆறு மாணவர்களை காரில் அழைத்துச் சென்றதாகவும், பள்ளியில் அஸ்விந்த் காரை விட்டு இறங்காததை கவனிக்காமல் கதவை சாத்திவிட்டு சென்று, மாலை மீண்டும் மாணவர்களை ஏற்ற கதவை திறந்த போது, அஸ்வின் உள்ளே மூச்சு திணறி இறந்து கிடந்ததாகவும் டிரைவர் தெரிவித்துள்ளார்.

மாணவன் வகுப்பறைக்கு வராததால் ஆப்சென்ட் போட்டதாக, பள்ளி நிர்வாகம் தரப்பில் போலீசில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த பெற்றோர், எதற்காக தங்கள் குழந்தைக்கு வலிப்பு வந்தது என்று கூறி, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்; மதிய உணவு கொடுத்து விட்ட டப்பாவில் இருந்த உணவை மாணவன் சாப்பிட்டுள்ள நிலையில், எப்படி வகுப்பறைக்கு வராமல் இருக்க முடியும்; தண்ணீர் பாட்டில் மூடி எப்படி காருக்குள் தனியாக சிதறி கிடந்திருக்கும் என, கேள்வி எழுப்பினர்.

மாணவனின் சித்தப்பா தினேஷின், 5 வயது மகள், அஸ்விந்த் தன்னுடன் காரில் இருந்து இறங்கி வகுப்பறைக்கு வந்ததாகவும், மதியம் சாப்பிட்டு விட்டு கீழே விழுந்து அடிபட்டு வாயில் ரத்தம் வந்ததை பார்த்ததாகவும் கூறியதாக நிருபர்களிடம் தெரிவித்தார்.

மாணவரின் தந்தை பாலமுருகன் கூறுகையில், ''பள்ளியில் வேறு ஒரு சம்பவத்தில் தன் மகன் இறந்து விட்ட நிலையில், அதை மூடி மறைக்க நிர்வாகம் கட்டுக்கதை கட்டி திசை திருப்புகிறது. போலீசாரும் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்' என, குற்றஞ்சாட்டினார்.

சிவகங்கை மாவட்டத்தில், கோவில் காவலாளி அஜித்குமார் மரணம் போலீசாரை பெரும் சிக்கலில் மாட்டிவிட்ட நிலையில், அடுத்ததாக சிறுவன் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருவது, போலீசுக்கு இன்னும் தலைவலியை அதிகமாக்கி உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us