பொன்முடி மகனுக்கு எதிரான வழக்கு விசாரணை வரும் 24க்கு தள்ளிவைப்பு
பொன்முடி மகனுக்கு எதிரான வழக்கு விசாரணை வரும் 24க்கு தள்ளிவைப்பு
பொன்முடி மகனுக்கு எதிரான வழக்கு விசாரணை வரும் 24க்கு தள்ளிவைப்பு
ADDED : ஜன 05, 2024 12:31 AM
சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவு செய்ய இருந்த நிலையில், கள்ளக்குறிச்சி எம்.பி., கவுதம சிகாமணி ஆஜராகாததால், வழக்கின் விசாரணையை வரும், 24ம் தேதிக்கு தள்ளி வைத்து, சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானுார் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில், அதிகளவில் செம்மண் எடுத்ததாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்ட எட்டு பேர் மீது, 2012ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்கக்கோரி கவுதம சிகாமணி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'அனுமதித்த அளவை மீறி, செம்மண் அள்ளியதில் அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது' எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.
பின், சென்னை மற்றும் விழுப்புரத்தில் பொன்முடி, கவுதம சிகாமணி வீடு, அலுவலகத்தில், அமலாக்கத்துறை நடத்திய சோதனையில், 81.70 லட்சம் ரூபாய் ரொக்கம், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டன; 41.9 கோடி ரூபாய் அளவுக்கான நிரந்தர வைப்பு தொகையும் முடக்கப்பட்டது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு தொடர்பாக, கவுதம சிகாமணி, உறவினர் ராஜ மகேந்திரன், வி.ஜெயச்சந்திரன், கே.சதானந்தம், கோபிநாத்துக்கு எதிராக, 90 பக்க குற்றப்பத்திரிகையை, முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், கடந்தாண்டு ஆக., 21ல் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
வழக்கு, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.மலர்வாலண்டினா முன் நடந்து வருகிறது. கடந்தாண்டு நவ.,24ல், நீதிமன்றத்தில் ஆஜரான கவுதம சிகாமணி உட்பட ஐந்து பேருக்கு, 90 பக்க குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. பின், குற்றச்சாட்டு பதிவுக்காக வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த வழக்கு, நீதிபதி டி.மலர்வாலண்டினா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கவுதம சிகாமணி தவிர மற்றவர்கள் ஆஜராகினர்.
ராஜ மகேந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.எஸ்.பிள்ளை, ''குற்றப்பத்திரிகை ஆவணங்களில் ஒரு சில பக்கங்களில் இடம்பெற்ற விபரங்கள் தெளிவாக இல்லாததால், அதுகுறித்து அமலாக்கத்துறை தெளிவுப்படுத்த வேண்டும்,'' என்றார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை ஜன., 24க்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.