உடன்குடி அனல் மின் நிலையத்தில் சோதனை மின் உற்பத்தி துவக்கம்
உடன்குடி அனல் மின் நிலையத்தில் சோதனை மின் உற்பத்தி துவக்கம்
உடன்குடி அனல் மின் நிலையத்தில் சோதனை மின் உற்பத்தி துவக்கம்
ADDED : செப் 14, 2025 06:05 AM

சென்னை:நீண்ட இழுபறிக்கு பின், துாத்துக்குடி மாவட்டம், உடன்குடி அனல் மின் நிலையத்தில் சோதனை மின் உற்பத்தி துவங்கிஉள்ளது.
துாத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் தலா, 660 மெகா வாட் திறனில், இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையத்தை, மின் வாரியம் அமைத்து வருகிறது. இதன் கட்டுமான பணிகள், 2017 டிச., 7ல் துவங்கின. மொத்த திட்ட செலவு, 13,076 கோடி ரூபாய்.
உடன்குடி மின் நிலையத்திற்கு நிலக்கரி எடுத்து வருவதற்காக, உடன்குடி கடற்கரையில் இருந்து கடலில், 7 கி.மீ., துாரத்திற்கு நிலக்கரி முனையம் அமைக்கப்பட்டு உள்ளது.
மின் நிலையத்தின் கட்டு மான பணிகளை, மத்திய அரசின் பி.எச்.இ.எல்., நிறுவனம் மேற்கொள்கிறது. அங்கு, 2021 - 22ல் மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டது. ஆனால், கட்டுமான பணிகள் மந்தகதியில் நடந்தன. இதை, வாரிய அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை.
இதனால், திட்டமிட்ட காலத்திற்குள் மின் உற்பத்தியை துவக்க முடியாத நிலை ஏற்பட்டது.
நீண்ட இழுபறிக்கு பின், உடன்குடி மின் நிலையத்தின் முதல் அலகில், இம்மாதம், 11ம் தேதி இரவு, 7:56 மணிக்கு, சோதனை மின் உற்பத்தி துவங்கியுள்ளது; அப்போது, 52 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப் பட்டது. இந்த மின்சாரம், மின் வழித்தடத்தில் இணைக்கப்பட்டது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தொடர் முயற்சியின் விளைவாக, உடன்குடி மின் நிலையத்தின் முதல் அலகில் சோதனை மின் உற்பத்தி துவங்கியுள்ளது. தற்போது, 'ஹெவி பர்னஸ் ஆயில்' பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்யப்படுகிறது. பின், நிலக்கரியை பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்யப்படும்.
ஒரு மின் நிலையம் முழு திறனில், 72 மணி நேரத்துக்கு தொடர்ந்து மின் உற்பத்தி செய்த பின், வணிக மின் உற்பத்தி துவங்கியதாக அறிவிக்கப்படும். எனவே, உடன்குடியில் சோதனை பணிகளை விரைவாக முடித்து, இந்தாண்டு இறுதிக்குள் வணிக மின் உற்பத்தி துவக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.