'தத்கால் டிக்கெட்' மாற்றம் போதாது: கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை
'தத்கால் டிக்கெட்' மாற்றம் போதாது: கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை
'தத்கால் டிக்கெட்' மாற்றம் போதாது: கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை
ADDED : ஜூன் 14, 2025 02:50 AM

சென்னை:'தத்கால்' டிக்கெட் முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் மட்டுமே போதாது; கூடுதல் ரயில்கள் இயக்கினால் மட்டுமே, பயணியர் நெரிசல் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்' என, ரயில் பயணியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, சென்னைக்கு வந்து செல்வோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், இன்னும் போதிய அளவில் ரயில்களின் சேவை இல்லாமல் இருக்கின்றன.
சென்னையில் இருந்து செல்லும் பாண்டியன், பொதிகை, நெல்லை, முத்துநகர், கன்னியாகுமரி, நாகர்கோவில், ராமேஸ்வரம் விரைவு ரயில்களில், எப்போதும் பயணியர் கூட்டம் அலைமோதுகிறது.
டிக்கெட் முன்பதிவு, 60 நாட்கள் இருக்கும்போது துவங்குகிறது. அன்று முன்பதிவு செய்தாலும், டிக்கெட் உறுதியாகாத நிலை ஏற்படுகிறது. ஏஜன்டுகள் முன்னதாகவே முன்பதிவு செய்வதால், சாதாரண மக்களுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை என புகார் எழுந்தது.
அதைத் தொடர்ந்து, 'தத்கால் டிக்கெட்' முன்பதிவு முறையில், சில மாற்றங்களை ரயில்வே கொண்டு வந்துள்ளது. எனினும், இது நிரந்தர தீர்வாகாது என, பயணியர் கூறுகின்றனர்.
இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணியர் சங்கத் தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது:
தென் மாவட்டங்களில் இருந்து, சென்னை வந்து செல்லும் பயணியர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து விட்டது. ஆனால், போதிய அளவில், ரயில்கள் இல்லை.
வழக்கமான நாட்களிலேயே இந்த நிலை என்றால், தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில், டிக்கெட் பெறுவது குதிரை கொம்பாகிறது.
சென்னை - கன்னியாகுமரி வரை, இரட்டை ரயில் பாதை பணி முடிந்து, ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், புதிய ரயில்கள் எதையும் இயக்கவில்லை. தத்கால் டிக்கெட் முறையில் புதிய மாற்றம் செய்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், இது மட்டுமே பயணியர் பிரச்னைக்கு தீர்வாகாது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருநின்றவூர் ரயில் பயணியர் பொதுநலச் சங்க தலைவர் முருகையன் கூறியதாவது:
பொதிகை, துாத்துக்குடி போன்ற விரைவு ரயில்களில், முக்கிய பண்டிகை நாட்களில் டிக்கெட் முன்பதிவின்போது 'ஆர்ஏசி' இருந்தாலும், 10 நாட்கள் ஆனாலும் உறுதியாவதில்லை.
விரைவு ரயில்களில், கூடுதல் 'ஏசி' பெட்டிகள் இணைக்கும்போது, ஏற்கனவே உள்ள பெட்டிகளை குறைப்பதை தவிர்க்க வேண்டும்.
தாம்பரம் - செங்கோட்டைக்கு, புதிய அந்த்யோதயா ரயில் அறிவிப்பு வெளியிட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால், இந்த ரயில் சேவை இன்னும் துவங்காத நிலையில் தான் இருக்கிறது. கூடுதல் ரயில்களை இயக்குவதால் மட்டுமே, பயணியரின் பெரும்பாலான பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.