பூவை ஜெகன் மூர்த்தி ஜாமின் வழக்கு தமிழக அரசு பதில் அளிக்க அவகாசம்
பூவை ஜெகன் மூர்த்தி ஜாமின் வழக்கு தமிழக அரசு பதில் அளிக்க அவகாசம்
பூவை ஜெகன் மூர்த்தி ஜாமின் வழக்கு தமிழக அரசு பதில் அளிக்க அவகாசம்
ADDED : செப் 12, 2025 12:20 AM
சிறுவன் கடத்தல் விவகாரத்தில் பூவை ஜெகன் மூர்த்தியின் ஜாமின் மனு மீது விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கால அவகாசம் வழங்கி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் சிறுவனை கடத்திச் சென்று தாக்கிய விவகாரத்தில், புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ.,வுமான பூவை ஜெகன் மூர்த்தி மீது ஆள்கடத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரத்தில் முன் ஜாமின் கேட்டு உச்ச நீதிமன்றத்தில், ஜூன் 28ல் ஜெகன் மூர்த்தி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஜெகன் மூர்த்திக்கு ஜாமின் வழங்கியதோடு, தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தது.
இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'கடத்தப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டு விட்டானா?' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, சிறுவன் மீட்கப்பட்ட தகவலை தமிழக அரசு தரப்பு தெரிவித்தது. மேலும், 'சிறுவனிடம் வாக்குமூம் பெறப்பட்டுள்ளது.
அவன் கடத்தப்பட்ட போது என்ன நடந்தது? சம்பவத்தில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பவை குறித்து, விரிவான பதில் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம். அதற்கு இரண்டு வாரம் அவகாசம் வேண்டும்' என, அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோரிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், ஒரு வார காலம் மட்டும் அவகாசம் வழங்கினர். மேலும், பூவை ஜெகன் மூர்த்திக்கு வழங்கப்பட்ட ஜாமின் நீட்டிக்கப்பட்டு, விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
- டில்லி சிறப்பு நிருபர் -