தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ராஜினாமா
தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ராஜினாமா
தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ராஜினாமா
ADDED : ஜன 10, 2024 11:25 PM

சென்னை:தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய அட்வகேட் ஜெனரலாக, மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், 2021 மே மாதம், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக, மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். இவர் பதவியை ராஜினாமா செய்து, தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
கவர்னருக்கு அந்த கடிதம் அனுப்பப்பட்டு, ஏற்கப்பட்ட பின், அட்வகேட் ஜெனரல் பதவியில் இருந்து விடுவிக்கப்படுவார். முன்னதாக, தன் ராஜினாமா முடிவை, முதல்வரிடம் நேரில் தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக, பதவி விலகுவதாகவும், இனி தனிப்பட்ட வழக்குகளில் ஆஜராக போவதாகவும், மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
கடந்த, 1996ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், தலைமை குற்றவியல் வழக்கறிஞராக சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அவரது அமைச்சரவையில் இருந்தவர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளில், இவர் ஆஜராகி உள்ளார்.
புதிய அட்வகேட் ஜெனரலாக, மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இவரும், ஏற்கனவே அட்வகேட் ஜெனராக பதவி வகித்தவர். முக்கிய வழக்குகளில், அரசு துறைகள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி வருகிறார்.