மனம் விட்டு பேசினாலே தற்கொலை எண்ணம் வராது; இன்று தற்கொலை தடுப்பு தினம்
மனம் விட்டு பேசினாலே தற்கொலை எண்ணம் வராது; இன்று தற்கொலை தடுப்பு தினம்
மனம் விட்டு பேசினாலே தற்கொலை எண்ணம் வராது; இன்று தற்கொலை தடுப்பு தினம்
ADDED : செப் 10, 2025 01:49 AM
மதுரை : ''மனம் விட்டு பேசினாலே தற்கொலை செய்ய நினைப்போரின் சிந்தனையை மாற்றி அவர்களை வாழவைக்கலாம்'' என்கிறார் மதுரை அரசு மருத்துவமனை மனநலப்பிரிவு துறைத்தலைவர் டாக்டர் கீதாஞ்சலி.
இன்று (செப்., 10) தற்கொலை தடுப்பு தினம். இதுகுறித்து டாக்டர்கள் கீதாஞ்சலி, சுகதேவ் கூறியதாவது:
உலகம் முழுவதும் 2003 ல் இருந்து தற்கொலை தடுப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தற்கொலை பார்வையை அபிப்பிராயத்தை மாற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்தாண்டின் நோக்கம். தற்கொலை எண்ணம் ஒருவருக்கு வருகிறது என்றால் நிறைய காரணங்கள் இருக்கலாம். அந்த நேரத்தில் அந்த எண்ணம் மட்டும் தான் மேலோங்கியிருக்கும். இதற்கு வேறு தீர்வு இல்லை என்ற சிந்தனை மட்டும் தான் இருக்கும். நம்மைச் சுற்றியுள்ள வாய்ப்புகளையும் எதிர்கால மாற்றங்களையும் சிந்திக்க வேண்டும். அதற்காக மற்றவர்களுடன் மனம் விட்டு பேச வேண்டும். அதனாலேயே அந்த எண்ணம் மாற்றப்படும்.
கவனிக்க தவறுகிறோம் 90 சதவீதம் பேர் மனஅழுத்தத்தையும் தற்கொலை எண்ணத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். சுற்றியுள்ளோர், குடும்ப உறுப்பினர்கள் அதை கவனிக்கத் தவறுகின்றனர். மனச்சோர்வை வெளிப்படுத்துபவர்களை அழைத்து பேசி மனமாற்றம் செய்ய வேண்டும். மனம் விட்டு பேசுவதற்கு வடிகால் ஏற்படுத்தினாலே தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபடுவார்கள். தேசிய குற்ற ஆவணப்பதிவகம் (என்.சி.ஆர்.பி.,) புள்ளி விவரப்படி இந்தியாவில் தற்கொலை செய்வோரில் மகாராஷ்டிரா முதலிடம், தமிழகம் 2ம் இடத்தில் உள்ளன. 2022 ல் தமிழகத்தில் மட்டும் 15 ஆயிரத்து 386 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
மதுரை அரசு மருத்துவமனை மனநலப்பிரிவில் மாதம் 4000 பேர் மனநல சிகிச்சைக்கும், ஆலோசனை பெறுவதற்கும் வருகின்றனர். தற்கொலை முயற்சி செய்த 150 பேருக்கு கவுன்சிலிங் அளிக்கப்படுகிறது.
வளர்ச்சியடைந்த நாடுகளில் போதைப்பழக்கம், உட்பட மனநல கோளாறுகளே தற்கொலைக்கு காரணம். இந்தியாவில் குடும்பப் பிரச்னை, உடல்நலப் பிரச்னைகள் முதன்மை காரணமாக உள்ளன. மனநலப் பிரச்னைகள் தற்கொலைக்கு முன்னோடியாக உள்ளது. அதற்கு சிகிச்சை பெற வேண்டும் என்றனர்.