பொறுமை இழந்ததால் போராட்டம்: ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஆவேசம்
பொறுமை இழந்ததால் போராட்டம்: ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஆவேசம்
பொறுமை இழந்ததால் போராட்டம்: ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஆவேசம்
ADDED : ஜன 30, 2024 10:41 PM

மதுரை : ''புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை 30 மாதங்களாகியும் நிறைவேற்றாததால் பொறுமை இழந்து போராட்டத்தில் ஈடுபடுகிறோம்,'' என மதுரையில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: இக்கோரிக்கைகளை வலியுறுத்தி முந்தைய ஆட்சியில் போராடியபோது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்துவோம் என்றார். அவர் முதல்வரான பின் 6 முறை சந்தித்தும் நிதிநிலை சரியானதும் நிறைவேற்றுவோம் என்றார். அந்த நம்பிக்கையுடன் இருந்தும் 30 மாதங்களாக ஒரு கோரிக்கையையும் நிறைவேறவில்லை. அகவிலைப்படியை போராடித்தான் பெற்றோம்.
கடந்த ஆட்சியில் கொரோனா நேரத்தில் சரண்டர் விடுப்பை ரத்து செய்து, குறிப்பிட்ட காலத்திற்கு பின் தருவோம் எனக்கூறி தரவில்லை.
இந்த ஆட்சியில் காலநிர்ணயம் இன்றி தராமல் உள்ளனர். இதனுடன் தொகுப்பு, சிறப்பு காலமுறை சம்பளம் பெறும் சத்துணவு, அங்கன்வாடி, எம்.ஆர்.பி., செவிலியர்கள் என பலருக்கும் காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.
சாலைப்பணியாளருக்கு 41 மாத காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். அரசு துறைகளில் 30 சதவீதம் காலியிடங்களை நிரப்ப வேண்டும். சி, டி பிரிவுகளில் அவுட்சோர்ஸிங் முறை பணிநியமனத்திற்கான அரசாணைகள் எண் 139, 115, 152, 297ஐ ரத்து செய்வது, இப்பிரிவில் டி.என்.பி.எஸ்.சி., மூலம் பணி நியமனம், 21 மாத சம்பள நிலுவை வழங்குவது என வலியுறுத்தி வருகிறோம்.
இவை எதுவும் புதியவை அல்ல. இதற்காக 3 அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் நல்ல செய்தி வரும் என்று கூறியும் வரவில்லை. இந்தியாவில் தமிழகம் முன்னுதாரணமாக திகழ அரசு ஊழியர்கள், ஆசிரியர்களே காரணம்.
முதலில் பிரசார இயக்கம், அடுத்து மறியல், பிப்., 10 ல் மாவட்டங்களில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு, பிப்.,15ல் ஒரு நாள் வேலை நிறுத்தம், அதற்கும் தீர்வில்லை எனில் பிப்.,26 ல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வோம் என்றார்.