Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கோமாளி கூட்டம் வீழ்த்த முடியாது ! ஸ்டாலின்

கோமாளி கூட்டம் வீழ்த்த முடியாது ! ஸ்டாலின்

கோமாளி கூட்டம் வீழ்த்த முடியாது ! ஸ்டாலின்

கோமாளி கூட்டம் வீழ்த்த முடியாது ! ஸ்டாலின்

UPDATED : ஜூன் 01, 2025 03:56 PMADDED : மே 31, 2025 11:36 PM


Google News
Latest Tamil News
மதுரை: நான் மமதையுடன் பேசுபவன் அல்ல, எனக்கு தெரிந்தது அரசியல், உழைப்பு தான். நம்மை எந்த கோமாளி கூட்டமும் வீழ்த்த முடியாது என இன்று நடந்த திமுக பொதுக்குழுவில் கட்சி தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் உணர்ச்சி பெருக்குடன் பேசினார்.

பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

' எந்த காலத்திலும் நான் ஆணவத்தில் இருந்தது இல்லை. நான் மமதையுடன் பேசுபவன் அல்ல. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று சொல்பவன் நான் அல்ல. எனக்கு தெரிந்தது பணிவு மட்டும்தான் . பணிவு தான் தலைமை பண்பின் அடையாளம். சூரியன் எப்போதும் இருப்பது போல் இந்த கழகமும் இருக்கும். திமுக நிரந்தரம் என்பது போல் ஆட்சியும் நிரந்தரமாக இருக்க வேண்டும். மேலும் எப்போதும் ஆட்சியை பிடிக்கும் என்ற நிலையையும் உருவாக்க வேண்டும். கருணாநிதி கதை, கவிதை எழுதுவார் , எனக்கு தெரிந்தது அரசியலும், உழைப்பும் தான். நாம் இலட்சிய பாதையில் நூற்றாண்டை நோக்கி செல்கிறோம். ஆதலால் தான் எந்த கோமாளி கூட்டமும் நம்மை வீழ்த்த முடியாது.

எதிரான அலை இல்லை !




ஒட்டுமொத்தமாக பா.ஜ.,வின் கட்டுப்பாட்டிற்குள் அ.தி.மு.க., சென்றுள்ளது. அதனால் தான் அமித்ஷா அடிக்கடி தமிழகத்திற்கு வருகிறார். தமிழகத்தை எந்த ஷாவாலும் அசைக்க முடியாது. தமிழகத்தையும் பா.ஜ.,வின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல இ.பி.எஸ்., துடிக்கிறார். டில்லிக்கு தமிழ்நாடு எப்போதும் அவுட் ஆப் கன்ட்ரோல் தான். தி.மு.க., ஆட்சிக்கு ஆதரவு அலைதான் அதிகம் வீசுகிறது; எதிரான அலை இல்லை. ஆனால் சிலர் நம் மீது அவதூறு பரப்ப துடிக்கின்றனர். ஆதரவு அலையை மறைக்க சிலர் திசை திருப்ப பார்க்கின்றனர். 7 வது முறை வரலாறு காணாத வெற்றியை பெற்று திமுக ஆட்சியை பிடித்தது என்ற செய்தி வர வேண்டும். இதற்கென அனைவரும் உழைக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

மதுரை உத்தங்குடியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட அரங்கில் கட்சி தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜூன்.1) தி.மு.க., பொதுக்குழு நடந்தது. வழக்கம் போல் சம்பிரதாயப்படி மத்திய அரசை கண்டித்தல் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தல் என தி.மு.க., பொதுக்குழு கூட்டம் தீர்மானத்துடன் முடிந்தது. பெரிதும் எதிர்பார்த்தது போல் புதிய அறிவிப்புகள் ஒன்றுமில்லை.

திமுகவில் புதிதாக 2 அணிகள்


பொதுக்குழு துவங்கியதும் மறைந்த தலைவர்கள் மன்மோகன்சிங், விஜயகாந்த், குமரி ஆனந்தன், விஞ்ஞானி எம்.எஸ். சுவாமி நாதன், பங்காரு அடிகளார், ஆம்ஸ்ட்ராங், மற்றும் காஷ்மீர் தாக்குதலில் பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து திமுகவில் புதிதாக 2 அணிகள் துவக்க பொதுக்குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி ஆசிரியர்கள், பேராசிரியர்கள் கொண்ட கல்வியாளர்கள் திமுக அணி, மாற்றுத்திறனாளிகள் திமுக அணி என 2 அணிகள் துவக்கப்படும். என அறிவிக்கப்பட்டது.

27 தீர்மானங்கள்


கருணாநிதி பிறந்த நாள் ஜுன் 3 செம்மொழி நாளாக கொண்டாடுவது, முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தல், கவர்னரின் அதிகார வரம்பை வரையறுத்து மாநில உரிமையை நிலைநாட்டிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்குக் காரணமான முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு, 2026 தேர்தலில் மீண்டும் ஸ்டாலினை முதல்வராக்கிட உழைப்பது, அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க பாடுபடுதல், வக்ப் சட்ட திருத்தத்ததை திரும்ப பெற வலியுறுத்தல், நகை அடகு தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்துவது,

தமிழகத்திற்கு நிதி தர மறுக்கும் மத்திய அரசை கண்டிப்பது, மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை கூடாது, சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து முடிக்க வலியுறுத்தல், இந்தி திணிப்பை கைவிட மத்திய அரசை வலியுறுத்தல், பொள்ளாச்சி மாணவி பலாத்கார வழக்கில் விரைந்து தீர்ப்பு வழங்க ஆவன செய்த தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் பாராட்டு தெரிவித்தல், உள்ளிட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சிறப்பு தீர்மானம் என்ன ?

ஓரணியில் தமிழ்நாடு என வாக்காளர்களை ஒருங்கிணைக்கும் பணியை வெற்றிகரமாக நடத்த திமுக நிர்வாகிகள் இறங்க வேண்டும். இதன்படி 30 சதவீத வாக்காளர்களை திமுகவில் உறுப்பினர்களாக்க வேண்டும் என்று ஒரு சிறப்பு தீர்மானத்தை கட்சி தலைவர் ஸ்டாலின் வாசித்தார். தொடர்ந்து உறுப்பினர்கள் கரவொலி எழுப்ப நிறைவேற்றப்பட்டது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து எதிர் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.



பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு சைவ, அசைவ விருந்து அளிக்கப்பட்டது. ஆடு, கோழி, மீன், என பல வெரைட்டி உணவுகள் பரிமாறப்பட்டன.

தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க, நேற்று மதுரை வந்த முதல்வருக்கு, விமான நிலையத்தில் அமைச்சர்கள் , கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி, மாநகராட்சி கமிஷனர் சித்ரா உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

நேற்று மாலை பெருங்குடியில் ரோடு ஷோ நிகழ்ச்சி துவங்கியது. வாகனத்தில் அமர்ந்தவாறு கைகூப்பி வணங்கியபடி முதல்வர் ஸ்டாலின் பயணித்தார். இடையில் அவ்வப்போது சாலையில் இறங்கி நடந்து, மக்களுடன் கைகுலுக்கி மகிழ்ந்தார். சாலையின் இருபுறமும் தொண்டர்கள், பெண்கள் ஆர்வமுடன் நின்று முதல்வரை வரவேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us