ஸ்டாலின் மீண்டும் முதல்வர்: லயோலா கருத்து கணிப்பு
ஸ்டாலின் மீண்டும் முதல்வர்: லயோலா கருத்து கணிப்பு
ஸ்டாலின் மீண்டும் முதல்வர்: லயோலா கருத்து கணிப்பு

சென்னை: தமிழகத்தில், வரும் 2026 தேர்தலில் முதல்வர் வாய்ப்பு யாருக்கு என்ற தலைப்பில், 'இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு' சார்பில் நடந்த கருத்துக்கணிப்பில், 77.83 சதவீதம் பேர், மீண்டும் முதல்வராக ஸ்டாலினுக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு நேற்று அளித்த பேட்டி:
சென்னை லயோலா கல்லுாரி முன்னாள் மாணவர்களால் உருவாக்கப்பட்ட, இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள் அமைப்பு சார்பில், 2026 தேர்தலில் யார் முதல்வராவார் என்பது குறித்து, 234 தொகுதிகளில் கருத்து கேட்கும் பணி, கடந்த பிப்., 5ம் தேதி துவங்கியது.
70,922 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பின் முதற்கட்ட ஆய்வு, இம்மாதம் 17ம் தேதி நிறைவு பெற்றது. தற்போதைய தமிழக அரசின் செயல்பாடுகள், மக்களின் பிரச்னைகளை தீர்க்கும் கட்சிகள் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிரதான கேள்விகளை மையமாக வைத்து, கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அதன்படி, தமிழகத்தில் அடுத்த முதல்வராக அதிக வாய்ப்புள்ள தலைவர்கள் என்ற கேள்விக்கு பெற்றப்பட்ட கருத்துகள் அடிப்படையில், 77.83 சதவீதம் பேர், ஸ்டாலின் மீண்டும் முதல்வராக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். அடுத்து, 73.30 சதவீதம் பேர் பழனிசாமிக்கும், 67.99 சதவீதம் பேர் உதயநிதிக்கும், 64.58 சதவீதம் பேர் அண்ணாமலைக்கும், 60.58 சதவீதம் பேர் விஜய்க்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இன்றைய அரசியல் சூழலில் யாருக்கு ஓட்டுப் போடுவீர்கள் என்ற கேள்விக்கு, 17.7 சதவீதம் பேர் தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்துள்ளனர். அ.தி.மு.க., - 17.3 சதவீம் பேர்; த.வெ.க., - 12.20 சதவீதம் பேர்; பா.ஜ.,வுக்கு 5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 3.3 சதவீதம் பேர், 'நோட்டா' என தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.