Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் செயலிழந்து மாற்று உறுப்புக்காக 7,936 பேர் காத்திருப்பு!

சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் செயலிழந்து மாற்று உறுப்புக்காக 7,936 பேர் காத்திருப்பு!

சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் செயலிழந்து மாற்று உறுப்புக்காக 7,936 பேர் காத்திருப்பு!

சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் செயலிழந்து மாற்று உறுப்புக்காக 7,936 பேர் காத்திருப்பு!

ADDED : ஜூன் 22, 2025 07:13 AM


Google News
Latest Tamil News
கோவை: தமிழகத்தில், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் நுரையீரல் செயல் இழப்பால், மாற்று உறுப்புக்காக காத்திருப்போர் பட்டியலில், 7,936 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. மூளைச்சாவு அடைவோரின் உறுப்புகள், குடும்பத்தினர் விருப்பத்துக்கேற்ப தானமாக பெறப்படுகிறது. மாநில அளவில், 2014ல் 135 கொடையாளர்களிடம் இருந்து, 705 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. 2024ல், 268 பேரிடம் இருந்து, 1,446 உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு தேவைப்படுவோருக்கு பொருத்தப்பட்டன.

2024ல் மட்டும் 449 சிறுநீரகம், 201 கல்லீரல், 39 நுரையீரல், 91 இதயம் தானமாக பெறப்பட்டு, உறுப்புகள் செயல் இழந்தவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன. இது குறித்து, தமிழ்நாடு உடல் உறுப்பு தான ஆணைய உறுப்பினர் செயலர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: வாழ்வியல் மாற்றத்துக்கு மக்கள் தயாராக வேண்டும். உடல் உறுப்புகள் செயல் இழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சிறுநீரகம், கல்லீரல் இதில் முன்னிலையில் உள்ளது. சிறுநீரக செயல் இழப்புக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல் பருமன், பருவநிலை மாற்றம், காற்று மாசு, விளம்பரங்களை பார்த்து சுயமாக மருந்து எடுத்தல், வலி நிவாரணி தொடர்ந்து எடுத்தல் போன்றவை காரணங்கள். கல்லீரல் வைரஸ் நோய் பாதிப்பு, மது அருந்துவது, உடல் பருமன் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.

தமிழகத்தில், 7,400 பேர் சிறுநீரகத்திற்காகவும், 475 பேர் கல்லீரல் வேண்டியும், 61 பேர் நுரையீல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். தவிர, இதயம், எலும்பு, தோல் போன்ற பல உறுப்புகள் செயல் இழந்து வாழ்க்கையுடன் போராடி வருகின்றனர்.உடல் உறுப்பு தானம் குறித்து, தற்போது அதிக விழிப்புணர்வு இருந்தாலும், வரும் முன் காக்கவேண்டியது அவசியம்.

வாழ்வியல் மாற்றம், சரியான உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சி என ஆரோக்கியத்துக்கு பொதுமக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

தானம் செய்வது எப்போது?

உடல் உறுப்பு தானம் என்பது சீறுநீரகம், கல்லீரல் ஒரு பகுதி, சில வகை திசுக்கள் உயிரோடு இருக்கும்போதும், கண், இதயம், நுரையீரல் போன்ற பிற உறுப்புகள் மூளைச்சாவு அடைந்த பின்னரும் தானம் செய்ய இயலும்.
மூளைச்சாவு என்பது மூளைத்தண்டு செயல்பட முடியாமல் போகும்போது, ஒரு நபரால் மூச்சு விட இயலாது. செயற்கை சுவாசம் அளிப்பதன் வாயிலாக, பிற உறுப்புகள் உயிரோடு சில மணி நேரம் வாழும். இதுபோன்ற சூழலில், உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு, குறிப்பிட்ட நேரத்திற்குள் தேவைப்படுவோரின் உடலில் பொருத்தப்படுகிறது. இதற்கு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us