வீடு வீடாக மக்களை சந்தித்த ஸ்டாலின்: 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்க பிரசாரம்
வீடு வீடாக மக்களை சந்தித்த ஸ்டாலின்: 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்க பிரசாரம்
வீடு வீடாக மக்களை சந்தித்த ஸ்டாலின்: 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்க பிரசாரம்

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று காலை வீடு வீடாகச் சென்று, 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கம் பற்றி முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பிரசார மற்றும் உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்தை, கடந்த 1ல் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து, தி.மு.க., நிர்வாகிகள் அவரவர் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களை நேரில் சந்தித்து, மத்திய பா.ஜ., அரசு தமிழகத்திற்கு அநீதி இழைப்பதாகவும், அதற்கு எதிராக தி.மு.க., அரசு கடுமையான போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் கூறுகின்றனர்.
கூடவே, தமிழகத்தின் நலன் காக்க, அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்; அதற்கான அவசியம் என்ன என்பது குறித்தும் விவரிக்கின்றனர்.
பின், அனைவரும் ஒன்று திரண்டு, தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும்' என்றும் சொல்லி பிரசாரம் மேற்கொள்கின்றனர். தமிழகம் முழுதும் தொடர்ச்சியாக 45 நாட்களுக்கு இந்த பிரசாரத்தை மேற்கொள்ள, தி.மு.க., திட்டமிட்டுள்ளது.
அதன்படி, நேற்று காலை, சென்னை ஆழ்வார்பேட்டை பகுதியில், வீடு வீடாகச் சென்ற முதல்வர் ஸ்டாலின், மக்களை நேரில் சந்தித்து, 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கம் பற்றி எடுத்துரைத்தார்.
இதற்காக தயாரிக்கப்பட்டுள்ள ஆறு கேள்விகள் கொண்ட படிவத்தை மக்களிடம் கொடுத்தார். அதை ஸ்டாலின் முன்னிலையில், மக்கள் பூர்த்தி செய்து கொடுத்தனர். ஒவ்வொரு வீட்டிலும் ஆறு கேள்விகளில் ஒன்றை மட்டும் கேட்டு, அவர் பதில் பெற்றார்.
மக்களை நேரில் சந்தித்தது குறித்து, கருத்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், “நாம் எதையும் கூறாமலேயே, நமக்கு வழிகாட்டுவது போல் மக்கள் பதிலளித்தனர். பொதுமக்கள் மிகுந்த விழிப்போடு இருப்பதைக் கண்டு பெருமித உணர்வு தோன்றுகிறது,” என்றார்.
நேற்றைய பிரசார பயணத்தில், முதல்வருடன் அமைச்சர் சுப்பிரமணியன் சென்றார்.