Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ மதுரையில் அழகிரியை சந்தித்து இரவு உணவு சாப்பிட்ட ஸ்டாலின்

மதுரையில் அழகிரியை சந்தித்து இரவு உணவு சாப்பிட்ட ஸ்டாலின்

மதுரையில் அழகிரியை சந்தித்து இரவு உணவு சாப்பிட்ட ஸ்டாலின்

மதுரையில் அழகிரியை சந்தித்து இரவு உணவு சாப்பிட்ட ஸ்டாலின்

UPDATED : ஜூன் 01, 2025 03:21 AMADDED : ஜூன் 01, 2025 02:41 AM


Google News
Latest Tamil News
மதுரை: மதுரையில் முதல்வர் ஸ்டாலின் தன் அண்ணனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரியை அவரது வீட்டில் சந்தித்தார். அங்கு இரவு உணவு சாப்பிட்டார்.

தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி அரசியலிலிருந்து ஒதுங்கி உள்ளார். முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற நிகழ்ச்சியில் அழகிரி சார்பில் அவரது மகன் தயாநிதி பங்கேற்றார்.

அதன் பிறகு மதுரை வந்த போதெல்லாம் அழகிரியை சந்திப்பதை தவிர்த்தார் ஸ்டாலின். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சையிலிருந்த தயாநிதியை பார்க்க சென்ற போது அழகிரியை சந்தித்தார் ஸ்டாலின்.

இந்நிலையில் மதுரையில் இன்று நடக்கும் தி.மு.க., பொதுக்குழுவில் பங்கேற்க ஸ்டாலின் நேற்று வந்தார். ஸ்டாலினை சில நாட்களுக்கு முன் அலைபேசியில் தொடர்பு கொண்ட அழகிரி டி.வி.எஸ்.நகரிலுள்ள தனது வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

நேற்றிரவு ரோடு ஷோ, மதுரை முதல் மேயர் முத்து சிலை திறப்பு விழாவை முடிந்து கொண்டு, பந்தல்குடி கால்வாயை ஆய்வு செய்த பின் சர்க்கியூட் ஹவுஸ் சென்றார் ஸ்டாலின்.

பின் அங்கிருந்து தேசிய கொடி இல்லாத தனி காரில் உதவியாளர் மற்றும் ஒரு பாதுகாவலருடன் புறப்பட்டு இரவு 9:57 மணிக்கு அழகிரி வீட்டிற்கு சென்றார். அவரை அழகிரி கட்டி தழுவி வீட்டிற்குள் அழைத்து சென்றார். அழகிரி வீட்டில் இரவு உணவு சுவீட், இடியாப்பம், இட்லி ஸ்டாலின் சாப்பிட்டார். பிறகு அழகிரி, அவரது மனைவி காந்தி, அவரது ஆதரவாளர்கள் மன்னன், உதயகுமார், எம்.எல்.ராஜ், கோபி, முன்னாள் எம்.எல்.ஏ., கவுஸ்பாட்ஷா ஆகியோர் முதல்வருடன் போட்டோ எடுத்து கொண்டனர். பிறகு அழகிரியும், ஸ்டாலினும் சிறிது நேரம் தனியாக பேசி கொண்டிருந்தனர். இரவு 10:25 மணிக்கு அங்கிருந்து புறப்பட்ட ஸ்டாலினை அழகிரி வெளியே வந்து வழியனுப்பி வைத்தார்.

அழகிரி ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், ''அண்ணனும் தம்பியும் சந்தித்தில் மகிழ்ச்சி. இவரும் குடும்ப உறவு குறித்து பேசி இருக்கலாம். இனி நல்ல காலம் தான்,'' என்றார். இன்று நடக்கும் தி.மு.க., பொதுக்குழுவில் பங்கேற்பது குறித்து அழகிரி தான் முடிவு எடுப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us