புது மேக்கப் போட்டு பழைய நாடகம் நடத்தும் ஸ்டாலின்: மத்திய மந்திரி கிண்டல்
புது மேக்கப் போட்டு பழைய நாடகம் நடத்தும் ஸ்டாலின்: மத்திய மந்திரி கிண்டல்
புது மேக்கப் போட்டு பழைய நாடகம் நடத்தும் ஸ்டாலின்: மத்திய மந்திரி கிண்டல்

ஹைதராபாத்: “புதிய கல்விக் கொள்கை, லோக்சபா தொகுதிகள் மறுவரையறை போன்றவற்றில், உண்மையை புரிந்து கொள்ளாமல், அரசியலுக்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவிக்கிறார்,” என, மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி குறிப்பிட்டார்.
தெலுங்கானா மாநில பா.ஜ., தலைவரும், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சருமான கிஷண் ரெட்டி, ஹைதராபாதில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:
புதிய கல்விக் கொள்கை மற்றும் லோக்சபா தொகுதிகள் மறுவரையறை போன்றவற்றில் தென் மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக, தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறி வருகிறார். இது, முழுக்க முழுக்க அரசியல் ரீதியிலானது என்பது அனைவருக்கும் தெரியும்.
தி.மு.க., அரசின் ஊழல்கள், கடுமையான வரி விதிப்புகள், மின்சார கட்டணம் உயர்வு, ஸ்டாலின் குடும்பத்தின் சர்வாதிகாரப் போக்கு ஆகியவற்றில், அரசுக்கு எதிரான மனநிலை தமிழகம் முழுதும் உள்ளது. இந்த பிரச்னையை திசைதிருப்பி, மக்களை துாண்டி விடும் வகையில் ஈடுபட்டுள்ளனர்.
தாய்மொழியில் கற்பிக்க வேண்டும் என்பதே தேசிய கல்வி கொள்கையின் அடிப்படை.
கடந்த 1986ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வந்த கல்விக் கொள்கையை, தி.மு.க., அப்போது எதிர்க்கவில்லை. மும்மொழி கொள்கையே சிறந்தது என, காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்ட கோத்தாரி கமிஷனும் பரிந்துரை செய்துள்ளது.
தமிழக சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தன் அரசின் மீதான மக்கள் கோபத்தை திசைதிருப்ப, புதிய மேக்கப் போட்டு, பழைய நாடகத்தை தி.மு.க., நடத்துகிறது.
புதிய கல்விக் கொள்கையானது, அனைத்து மொழிகளையும் ஊக்குவிக்கிறது. தாய் மொழியில் கற்பிக்க வேண்டும் என்று கூறுகிறது. ஆனால், இதெல்லாம் தெரிந்தும், புரிந்தும், தி.மு.க.,வும், காங்கிரசும் தேர்தல் நாடகம் நடத்துகின்றன.
தொகுதி மறுவரையறை தொடர்பாக அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்தியதில் தவறில்லை. ஆனால், பொய் தகவலை பரப்புவது தான் தவறு.
முதலில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதன்பிறகே, தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும். அதிலும், தொகுதிகள் குறைக்கப்படாது என, மத்திய அரசு தெளிவாக கூறியுள்ளது.
இருப்பினும், இந்த விஷயத்தில் ஸ்டாலின் புரிந்து பேசுகிறாரா, புரியாமல் பேசுகிறாரா என்பது தெரியவில்லை. ஆனால், தேர்தலுக்காக பேசுகிறார் என்பது மட்டும் தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.