கனிம வளங்கள் கொள்ளையை அரசு வேடிக்கை பார்ப்பதாக அண்ணாமலை புகார்
கனிம வளங்கள் கொள்ளையை அரசு வேடிக்கை பார்ப்பதாக அண்ணாமலை புகார்
கனிம வளங்கள் கொள்ளையை அரசு வேடிக்கை பார்ப்பதாக அண்ணாமலை புகார்
ADDED : மார் 17, 2025 05:28 AM

சென்னை: 'தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுவதை, தி.மு.க., அரசு வேடிக்கை பார்க்கிறது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை:
அனுமதியின்றி கேரளாவுக்கு கனிம வளங்களை கடத்தியதாக, கோவை மதுக்கரை தி.மு.க., நகராட்சி தலைவர் நுார்ஜகானின் மகன் ஷாரூக்கானுக்கு சொந்தமான, இரண்டு டாரஸ் லாரிகள், கோவை மாவட்ட கனிமவள துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தமிழகத்தில், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து, மாநிலம் முழுதும் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன.
முழுக்க முழுக்க தி.மு.க.,வினரால் நடத்தப்படும் இந்த கொள்ளையால், தமிழக வளங்கள் பறிபோகின்றன. தமிழக மக்களுக்கு தேவைப்படும் கட்டுமான பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றன. இதனால், அதிக விலை கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தி.மு.க.,வினர் பணம் சம்பாதிக்க, மாநிலத்தையே சுரண்டி கொழுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதையெல்லாம், தி.மு.க., அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழகம் முழுதும் கனிமவள கடத்தலில் ஈடுபடும், பல்லாயிரக்கணக்கான லாரிகளில் சிக்கியது இரண்டு மட்டுமே. கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, என கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது, தி.மு.க., அரசு எப்போது நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.