சிறு வணிகர்களுக்கு கடன் வரும் 12 வரை சிறப்பு முகாம்
சிறு வணிகர்களுக்கு கடன் வரும் 12 வரை சிறப்பு முகாம்
சிறு வணிகர்களுக்கு கடன் வரும் 12 வரை சிறப்பு முகாம்
ADDED : ஜன 05, 2024 12:34 AM
சென்னை:'சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், கூட்டுறவு வங்கிகளில் சிறு வணிகர்களுக்கு கடன் வழங்க, 12ம் தேதி வரை சிறப்பு முகாம் நடக்கிறது' என, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு:
'மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, மாவட்ட சிறு வணிகர்களின் தொழில் பயன்பாட்டிற்கான இயந்திரங்களை பழுது பார்க்கவும், வாழ்வாதாரத்தை மீட்டு எடுக்கவும், 'முதல்வரின் சிறப்பு சிறு வணிக கடன் திட்டம்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள நகர கூட்டுறவு வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கி; காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில் உள்ள நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் வாயிலாக, குறைந்த வட்டியில் அதிகபட்சம், 10,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படும்.
பூ, பழம், காய்கறி வியாபாரிகள் உள்ளிட்ட சிறு வணிகர்கள் கடன் பெற தகுதி பெறுவர்.
இதற்காக, நான்கு மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள், இன்று முதல் 12ம் தேதி வரை நடக்கிறது.
சென்னையில் பாண்டிபஜார், திருவல்லிக்கேணி உட்பட ஏழு வங்கி கிளைகளிலும், மற்ற மாவட்டங்களில் 12 இடங்களிலும் முகாம்கள் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.