எஸ்.பி.சி.ஏ., சொத்துக்களை பத்திரப்பதிவு செய்ய தடை
எஸ்.பி.சி.ஏ., சொத்துக்களை பத்திரப்பதிவு செய்ய தடை
எஸ்.பி.சி.ஏ., சொத்துக்களை பத்திரப்பதிவு செய்ய தடை
ADDED : மே 20, 2025 06:15 AM
சென்னை : எஸ்.பி.சி.ஏ., எனப்படும், விலங்குகள் பாதுகாப்பு மற்றும் துன்புறுத்தல் தடுப்பு அமைப்பின் சொத்துக்கள் தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய, பதிவுத்துறை தடை விதித்துள்ளது.
எஸ்.பி.சி.ஏ., என்ற பெயரில், விலங்குகள் பாதுகாப்பு மற்றும் துன்புறுத்தல் தடுப்புக்கான அமைப்பு, தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது, மாநில அளவிலும், மாவட்ட அளவிலும், இதற்கான கிளை அமைப்புகள் உள்ளன.
பதிவுத்துறையில் சங்கமாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த அமைப்புகள் வாயிலாக விலங்குகளை பாதுகாக்கவும், சிகிச்சை அளிக்கவும், அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள், நிலம் உள்ளிட்ட சொத்துக்களை தானமாக வழங்கி உள்ளனர்.
இந்நிலையில், தஞ்சையில், எஸ்.பி.சி.ஏ., அமைப்புக்கு வழங்கப்பட்ட சொத்துக்களை, தனியார் சிலர் அபகரிக்க முயற்சிப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, பதிவுத்துறை பிறப்பித்துள்ள உத்தரவு:
எஸ்.பி.சி.ஏ., அமைப்புக்கு, தஞ்சாவூரில் நான்கு வெவ்வேறு இடங்களில், 100 ஏக்கருக்கும் மேற்பட்ட சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களை, தனியார் சிலர் அபகரிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
எனவே, இந்த அமைப்புக்கு சொந்தமான சொத்துக்கள் தொடர்பாக வரும் பத்திரங்களை, சார்-பதிவாளர்கள் பதிவு செய்யக்கூடாது. அரசின் அனுமதியின்றி, இதில் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.