தென் மாவட்டங்களிலும் சிறுவணிக கடன் முகாம்?
தென் மாவட்டங்களிலும் சிறுவணிக கடன் முகாம்?
தென் மாவட்டங்களிலும் சிறுவணிக கடன் முகாம்?
ADDED : ஜன 05, 2024 10:16 PM
சென்னை:கூட்டுறவு துறை சார்பில், 'மிக்ஜாம்' புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பூ, பழம், காய்கறி உள்ளிட்ட சிறு வியாபாரிகள் பயன் பெற, 'முதல்வரின் சிறப்பு சிறு வணிக கடன் திட்டம்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான முகாம் நேற்று துவங்கி, 12ம் தேதி வரை நடக்கிறது.
இத்திட்டத்தின் கீழ், நகர கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில், ஒரு நபருக்கு, 10,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த கடனை வாரம், 200 அல்லது மாதம், 1,000 ரூபாய் என்ற தவணையில் திரும்ப செலுத்தலாம். வட்டி மிகவும் குறைவு.
டிசம்பர் இறுதியில் பெய்த அதீத கன மழையால், தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அங்குள்ள சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரம் முடங்கியுள்ளது.
இந்த மாவட்டங்களிலும் சிறப்பு முகாம் நடத்தி, சிறு வணிக கடனை அதிக நபர்களுக்கு வழங்க வேண்டும் என, அம்மாவட்ட வியாபாரிகள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.