Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/ சிவகங்கை லாக் அப் மரணம்; முதல்வர் கூறப் போகும் பதில் என்ன? கேட்கிறார் நயினார் நாகேந்திரன்

சிவகங்கை லாக் அப் மரணம்; முதல்வர் கூறப் போகும் பதில் என்ன? கேட்கிறார் நயினார் நாகேந்திரன்

சிவகங்கை லாக் அப் மரணம்; முதல்வர் கூறப் போகும் பதில் என்ன? கேட்கிறார் நயினார் நாகேந்திரன்

சிவகங்கை லாக் அப் மரணம்; முதல்வர் கூறப் போகும் பதில் என்ன? கேட்கிறார் நயினார் நாகேந்திரன்

ADDED : ஜூன் 30, 2025 01:10 PM


Google News
Latest Tamil News
சென்னை: 'சிவகங்கை இளைஞன் அஜித்குமாரின் இறப்புக்கு போலீஸ் துன்புறுத்தல் காரணம் இல்லையென்றால், 6 காவலர்கள் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்? இது கொலை தான் என்று ஒப்புக்கொண்ட பின்னும், கொலை வழக்கை ஏன் பதியவில்லை?' என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவரது அறிக்கை:

1. காவல்துறையால் கைது செய்யப்பட்ட அஜித்குமார் 24 மணி நேரத்திற்குள் நீதிபதிக்கு முன் ஏன் ஆஜர்படுத்தப்படவில்லை?

2. பல இடங்களில் அஜித்குமாரை வைத்து அடித்து துன்புறுத்திய காவல்துறை மடப்புரம் கோவில் அலுவலகத்தின் பின்புறம் அழைத்து சென்று அவரைத் தாக்கியதாக அஜித்குமாரின் சகோதரர் நவீன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கோவிலில் இருந்து விசாரணை என்ற பெயரில் முறையாக கைது செய்யப்படாத ஒருவரை காவல்துறை அழைத்துச்செல்ல அனுமதி வழங்கியது யார்?

3. விரைந்து தனிப்படை அமைத்து அஜித்குமாரை விசாரிக்கும்படி விசாரித்து 'உண்மையை' வரவழைக்க மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் வாயிலாக, நகையை பறிகொடுத்தவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஒருவர் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறதே. இது உண்மையா? உண்மை எனில், யார் அவர்? அவர் மீது என்ன நடவடிக்கை?

4. இரும்பு கம்பியால் சரமாரியாக அடிக்கப்பட்டு, மிளகாய் பொடி கலந்த தண்ணீரை குடிக்கச் செய்து துன்புறுத்தப்பட்ட அஜித்குமார் மயங்கி விழுந்த பின் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாமல், நான்கு மணி நேரம் போலீஸ் டெம்போ வேனில் பூட்டிவைக்கப்பட்டது ஏன்?

5. எளிய பின்புலம் கொண்ட இந்த இளைஞன் உயிர் வாழ்ந்தால் என்ன, இறந்தால் என்ன என்ற ஏளனமான எண்ணமா? அல்லது, உயிர் பிரிந்து விட்டது என்று தெரிந்து, தடயங்களை அழிக்கவும், கட்டுக்கதைகளை புனையவும் காவல் துறையினருக்கு தேவைப்பட்ட அவகாசம் தான் அந்த 4 மணி நேரமா?

6. நான்கு மணி நேரம் தாமதமாக அழைத்து வந்த காரணத்தினாலும், சந்தேகத்திற்குரிய நிலையில் மரணம் நிகழ்ந்துள்ள காரணத்தினாலும், அஜித்குமாரை பரிசோதிக்க திருப்புவனம் அரசு மருத்துவமனையும், மானாமதுரை அரசு மருத்துவமனையும் மறுத்துவிட்டதால், மதுரை வரை சென்று ஒரு தனியார் மருத்துவமனையில் அஜித் குமாரை சடலமாக காவல்துறையினர் பரிசோதனைக்கு ஒப்படைத்தார்கள் என்பது உண்மையா?

7. அஜித்குமாரின் இறப்புக்கு போலீஸ் துன்புறுத்தல் காரணம் இல்லையென்றால், 6 காவலர்கள் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்? இது கொலை தான் என்று ஒப்புக்கொண்ட பின்னும், அஜித் குமாரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கொலை வழக்கை இப்பொழுது வரையில் ஏன் பதியவில்லை? ஏன் கைது செய்யவில்லை?

8. இவ்வளவு குளறுபடிகள் இருந்தும், போராட்டத்தில் இறங்கிய அஜித் குமாரின் குடும்பத்தாரிடம் சடலத்தை பெற்றுக்கொள்ளவும், பிரச்னையை பெரிதாக்காமல் இருக்கவும் தி.மு.க.,வினரை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அவர்கள் மசியாமல் இருந்த நிலையில், காவல் துறையின் பாதுகாப்புடன் தி.மு.க., கொடிப் பொருந்திய வாகனத்தில் அஜித் குமாரின் தம்பியான நவீனை மறுபடியும் எங்கேயோ அழைத்துச் செல்ல முயற்சித்தது எவ்வித அராஜக செயலாகும்? நீதியை தடுக்கும் பொருட்டு செயல்பட்ட தி.மு.க., அமைச்சர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது எப்பொழுது வழக்குப்பதிவு?

9. இதுவரை தி.மு.க., ஆட்சியில் 24க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் முதல்வரின் வேலையா? தமிழகக் காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா? தொடர் காவல் மரணங்களுக்கு முதல்வர் கூறப் போகும் பதில் என்ன? இதற்கெல்லாம் முதல்வர் தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்வது எப்பொழுது? மக்கள் கேட்கிறார்கள்.

இவ்வாறு முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us