புதுச்சேரி பா.ஜ.,வில் இருந்து மூத்த நிர்வாகிகள் விலக முடிவு
புதுச்சேரி பா.ஜ.,வில் இருந்து மூத்த நிர்வாகிகள் விலக முடிவு
புதுச்சேரி பா.ஜ.,வில் இருந்து மூத்த நிர்வாகிகள் விலக முடிவு
ADDED : செப் 10, 2025 06:33 AM

புதுச்சேரி : புதுச்சேரி பா.ஜ., முன்னாள் தலைவர் சாமிநாதனை தொடர்ந்து, மூத்த நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில், கடந்த காலங்களில் பா.ஜ., பெயரளவிலான கட்சியாகவே இருந்தது. கடந்த 2015ம் ஆண்டில், அக்கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்ற சாமிநாதன், கட்சியை மக்களிடம் கொண்டு சென்றார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., கட்சியுடன் கூட்டணி அமைத்து, பா.ஜ., ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முக்கிய பங்காற்றினார்.
இந்நிலையில், கடந்த 2023ம் ஆண்டு சாமிநாதன் மாற்றப்பட்டு, கட்சியின் மாநில தலைவராக செல்வகணபதி எம்.பி., நியமிக்கப்பட்டார். அதன்பின், சாமிநாதனுக்கு கட்சியில் எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை. மாறாக, அவர் நியமித்த நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டனர். அவர்களுக்கு வேறு பதவிகள் எதுவும் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டனர்.
இதன் காரணமாக, கட்சி பணிகளில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருந்த சாமிநாதன், பா.ஜ.,வில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். இதை, பா.ஜ.,வில் புறக்கணிக்கப்பட்ட முன்னாள் நிர்வாகிகள் பலரும் வரவேற்றுள்ளனர். அத்துடன், சாமிநாதனை தொடர்ந்து, மூத்த நிர்வாகிகள் பலரும் பா.ஜ.,வில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஐந்து மாதங்களே உள்ள நிலையில், பா.ஜ.,வில் உள்ளவர்கள் கட்சியில் இருந்து விலகுவது, கட்சி நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.