தி.மு.க., அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புவர்: பா.ஜ.,
தி.மு.க., அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புவர்: பா.ஜ.,
தி.மு.க., அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புவர்: பா.ஜ.,
ADDED : செப் 10, 2025 06:32 AM

மதுரை: ''நாளுக்கு நாள் தி.மு.க., கூட்டணி வலுவிழந்து வருகிறது. வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புவர்,'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மதுரையில் அவர் அளித்த பேட்டி:
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஜான் பாண்டியன் ஆகியோர், முத்துராமலிங்கத் தேவர் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு சூட்டுவது குறித்து கூறிய கருத்துகளுக்கு, நான் பதில் சொல்ல விரும்பவில்லை.
பா.ஜ.,வைப் பொறுத்தவரை, எப்போதும் முத்துராமலிங்கத் தேவரை கடவுளாக நினைக்கிறோம். இம்மானுவேல் சேகரன் நினைவு நாளுக்கும் செல்கிறோம். இதில் எந்த சர்ச்சையும் இல்லை.
கூட்டணி குறித்து மாநிலத் தலைவர் நாகேந்திரன் பேசிவிட்டார். நல்லது நடக்கும்.
நடிகர் விஜய், 24 மணி நேரமும் அரசியல் தலைவராக இருக்க வேண்டும் என, தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர். த.வெ.க., ஒரு சீரியசான கட்சி என்றால், 24 மணி நேரமும் மக்கள் பணி செய்ய வேண்டும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மட்டும் மக்களை பார்ப்பேன்; வார நாட்களில் பார்க்க மாட்டேன் என்பது புதிதாக வந்திருக்கக்கூடிய அரசியல் கட்சிக்கு அழகல்ல.
எதிர்க்கட்சிக்கு எதிர்ப்புகள் தான் வரும். பிரசாரத்துக்கு ஒரு இடத்தில் அனுமதி கொடுக்கவில்லை என்றால், அரை கிலோ மீட்டர் தள்ளி வையுங்கள்; மக்கள் வருவர்.
தி.மு.க., அரசின் செயல்பாடுகளால், தி.மு.க.,வுக்கு சாதகமான மனநிலையில் மக்கள் இல்லை. அதனால், நாளுக்கு நாள் தி.மு.க., கூட்டணி வலுவிழந்து வருகிறது. வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்புவர். இவ்வாறு அவர் கூறினார்.