நாமக்கல், ஈரோடில் இரண்டாம் நாளாக சோதனை
நாமக்கல், ஈரோடில் இரண்டாம் நாளாக சோதனை
நாமக்கல், ஈரோடில் இரண்டாம் நாளாக சோதனை
ADDED : ஜன 03, 2024 11:12 PM
நாமக்கல்:நாமக்கல்லில் உள்ள கான்ட்ராக்டர் வீடு, அலுவலகத்தில், வருமான வரித்துறையினர், 2ம் நாளாக, நேற்றும் தொடர்ந்து சோதனை நடத்தினர்.
நாமக்கல்லை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 74. இவர், 'சத்தியமூர்த்தி அண்டு கோ' என்ற பெயரில், நாமக்கல் மற்றும் சென்னையில் அலுவலகம் அமைத்து, தமிழக அரசின் வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம் போன்ற துறைகளில், டெண்டர் மூலம் கான்ட்ராக்ட் பெற்று, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில், கட்டடங்களை கட்டி வருகிறார்.
நேற்று முன்தினம், கோவை, ஈரோடு, நாமக்கல், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள, 'சத்தியமூர்த்தி அண்டு கோ' நிறுவனத்துக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனையில் ஈடுபட்டனர்.
நாமக்கல், முல்லை நகரில் உள்ள அவரது பங்களா மற்றும் அப்பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திலும், சோதனை நடந்தது. நேற்று முன்தினம், நள்ளிரவு வரை இந்த சோதனை நீடித்தது.
தொடர்ந்து, அதிகாரிகள், தனியார் ேஹாட்டலுக்கு சென்றனர். நேற்று காலை, 6:00 மணிக்கு, வருமான வரித்துறை அதிகாரிகள், மீண்டும் சத்தியமூர்த்தியின் வீடு மற்றும் அலுவலகங்களில், தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், சத்தியமூர்த்தி அலுவலகத்தில் பணியாற்றி வந்த பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பாமல், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோட்டிலும்
ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவில் பகுதியை சேர்ந்தவர் குழந்தைசாமி. இவரது மகன்கள் பாலசுப்பிரமணி, வெங்கடாச்சலம். இவர்கள், சி.எம்.கே., ப்ராஜெக்ட்ஸ் பி லிமிடெட் என்ற கட்டு மான நிறுவனம் நடத்தி வருகின்றனர்.
கடந்த, 2ல், ராஜாகாடு கருப்பண்ண வீதி, சத்தி சாலையில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் வரி ஏய்ப்பு செய்ததாக கூறி, வருமான வரித்துறையினர் சோதனையை துவக்கினர்.
காஞ்சிகோவிலில் உள்ள குழந்தை சாமி வீடு, ஈரோடு ரகுபதி நாயக்கன்பாளையத்தில் உள்ள ஆர்.பி.பி., கன்ஸ்ட்ரக் ஷன் உரிமையாளர் செல்வ சுந்தரம் வீடு, ஈரோடு பெரியார் நகரில் உள்ள பி.வி., இன்ப்ரா ப்ராஜெக்ட்ஸ் நிறுவனத்திலும், சோதனை நடந்தது.
நேற்று இரண்டாம் நாளாக கருப்பண்ண வீதி, ராஜா காட்டை தவிர ஏனைய இடங்களில், வருமான வரித்துறை சோதனை நடந்தது.
மேலும், ஈரோடு படேல் வீதியில் உள்ள, ஏ.ஏ., பில்டர்ஸ் அண்டு பிரமோட்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்திலும், நேற்று முன்தினம் முதல், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.