மணல் குவாரி முறைகேடு; அமலாக்கத்துறை வழக்குகள் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு
மணல் குவாரி முறைகேடு; அமலாக்கத்துறை வழக்குகள் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு
மணல் குவாரி முறைகேடு; அமலாக்கத்துறை வழக்குகள் ரத்து: உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூலை 16, 2024 02:35 PM

சென்னை: தமிழகத்தில் மணல் குவாரி முறைகேடு புகார் தொடர்பாக, தொழிலதிபர்கள் மீது அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், அதன் மூலம் கிடைத்த வருமானத்தை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும், தொழிலதிபர்கள் ராமச்சந்திரன் மற்றும் ரத்தினம் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை ரத்து செய்ய கோரியும், சொத்து முடக்கத்தை நீக்க கோரியும் ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு இன்று(ஜூலை 16) விசாரித்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் “சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படவில்லை. அமலாக்கத் துறையின் நடவடிக்கை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது” என வாதிட்டனர்.
சட்டவிரோதம்
இதையடுத்து, “அமலாக்கத் துறை நடவடிக்கை சட்டவிரோதமானது. மணல் குவாரிகள் அமலாக்க துறை அதிகார வரம்புக்குள் வராது” என்று குறிப்பிட்டு தொழிலதிபர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்தனர். அவர்களது சொத்து முடக்கத்தை நீக்கியும் உத்தரவு பிறப்பித்தனர்.