15 கோவில்கள் திருப்பணிக்கு ரூ.35.87 கோடி ஒதுக்கீடு
15 கோவில்கள் திருப்பணிக்கு ரூ.35.87 கோடி ஒதுக்கீடு
15 கோவில்கள் திருப்பணிக்கு ரூ.35.87 கோடி ஒதுக்கீடு

சென்னை: ஆயிரம் ஆண்டுகள் பழமையான, 15 கோவில்களில் இறுதி கட்டமாக 35.87 கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணி செய்ய, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
'தமிழகத்தில், 1,000 ஆண்டுகள் பழமையான கோவில்களில் திருப்பணி செய்திட, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்' என, சட்டசபையில், 2024 - 25ம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அதை செயல்படுத்தும் விதமாக, கடந்த மார்ச் 17ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையில், 41 கோவில்களுக்கு முதற்கட்டமாக, 62.06 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணி செய்ய தமிழக அரசு அனுமதி அளித்தது.
நடப்பு நிதியாண்டின் நான்காம் காலாண்டில், 20 சதவீதத்திற்கு மட்டும், அதாவது, 12.41 கோடி ரூபாயை விடுவிக்க, அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர், 1,000 ஆண்டுகள் பழமையான, 15 கோவில்களின் திருப்பணிகளை இறுதி கட்டமாக 36.86 கோடி ரூபாயில் மேற்கொள்ள நிர்வாக அனுமதி வழங்கி, நிதி ஒதுக்கும்படி அரசுக்கு கருத்துரு அனுப்பினார்.
இதை பரிசீலனை செய்த அரசு, 15 கோவில்களில், 35.87 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ள நிர்வாக அனுமதி அளித்துள்ளது.
கோவில்களின் பணி முன்னேற்றத்தின் அடிப்படையில், தேவைக்கேற்ப நிதி ஒதுக்க வேண்டும் என, தெரிவித்துள்ளது. இதற்கான அரசாணையை, ஹிந்து சமய அறநிலையத்துறை செயலர் மணிவாசன் வெளியிட்டுள்ளார்.