குட்டியப்பட்டியில் சேவல் கண்காட்சி
குட்டியப்பட்டியில் சேவல் கண்காட்சி
குட்டியப்பட்டியில் சேவல் கண்காட்சி
ADDED : ஜன 08, 2024 05:29 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே குட்டியப்பட்டியில் நடந்த சேவல் கண்காட்சியில் ஏராளமானோர் தங்கள் சேவல்களை காட்சிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றனர்.
இக்கண்காட்சியில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 400-க்கும் மேற்பட்ட சேவல்கள் இடம் பெற்றன. விசிறிவால், கிளிமூக்கு சேவல்கள் அதிகளவில் இடம் பெற்றன. மயில், காகம், கீரி, நுாலான், வெள்ளை, செங்கீரி, பூதி, கரடு, வெளுகொன்ரம் உள்ளிட்ட 15-க்கு மேற்பட்ட ரக சேவல்கள் பார்வையாளர்களை கவர்ந்தன.
சேவல்கள் பராமரிப்பு, வளர்ப்பு முறை, உணவு குறித்து இதில் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
சேவல்களை தாக்கும் நோய்களும், அதிலிருந்து சேவல்களை பாதுகாப்பது குறித்தும் கால்நடை டாக்டர்கள் ஆலோசனைகளை வழங்கினர். சேவல்களின் முகசுத்தம், கால் சுத்தம், கொண்டை அழகு, முடியின் நீளம், கூரான பார்வை, உயரம், நீளம், எடையளவு ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த சேவல்கள் தேர்வு செய்யப்பட்டன.
100 சேவல்கள் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.3 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. அவற்றிலிருந்து 30 சேவல்கள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. விசிறிவால், கிளிமூக்கு சேவல்கள் ரூ.5 லட்சம் வரை விற்பனையாயின.